2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லவே மாட்டோம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், கடந்த சில வாரங்களாக, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று, பல்வேறான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளனர்.  

பிரதமர் கிழக்குக்கு சென்றிருந்த போது, அங்கு பல பிரதேசங்களுக்கும் அவரை அழைத்துச் சென்றிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த கோகொல்லாகம, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உள்ளிட்ட பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எடுத்தியம்பினார்.   

பிரதமரின் கிழக்கு விஜயத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளும் இணைந்திருந்தனர். அவர்களில் சிலர், பிரதமருடன் இணைந்து பகல்போசனத்திலும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சங்களில் ஒன்றாகும். அந்த பகல்போசன ஏற்பாடுகள் யாவும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஷீர் அஹமட்டின், ஏராவூரிலுள்ள வாசஸ்தலத்தி​லேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.   

அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை, பிரதமர் அங்கிருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். திங்கட்கிழமையை கொழும்பில் கழித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டரின் ஊடாக, கா​லியை நோக்கிச் சென்றார். அப்போது, அங்கு ஓரளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது.   

மழையையும் பொருட்படுத்தாமல், வைபவம் இடம்பெற்ற மேடைக்கு பிரதமர் சென்றபோது, அங்கிருந்தவர்கள், திருதிருவெனப் பார்த்துள்ளனர்.  

“கோர்ட் அணிவரை விட, சேர்ட்டுக்கு மேல், ஜெக்கட் அணிவது இலகுவானது. ஸ்மாட் கெசூவலில் வருமாறே கூறியிருந்தனர்” என அங்கிருந்தவர்களை பார்த்து புன்முறுவலுடன் கூறிவிட்டார்.   

இளநீர் நிறத்திலான, இந்திய முறைமையிலான ஜெக்கட்டை அணிந்தவாறே, அந்த வைபவத்தில் பங்​கேற்றிருந்தார். வைபவம் நிறைவடைந்ததன் பின்னர், வ​ழமை போலவே, பிரதமருடன் சம்பாஷணைகள் இடம்பெற்றன.   

“நாங்கள் நினைத்தோம், ஜனாதிபதி மைத்திரிபால தேர்தலில் போட்டியிடுவா​ர்” என, அமைச்சர்களான வஜிர அபேவர்தன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகிய இருவரும் கூறிவிட்டனர். எவ்விதமான பதிலையும் அளிக்காத, பிரதமர், சிரித்துக்கொண்டே அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டார்.   

கடுமையான பணிகளுக்கு மத்தியில், நேற்று வியாழக்கிழமை, அலரி​மாளிகையில் இடம்பெற்ற, முக்கியமான கூட்டங்களிலும் பங்கேற்றிருந்த பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.   

“ஒன்றிணைந்த எதிரணி, இன்றுதானே(நேற்று) அரசாங்கத்தைக் கவிழ்த்து, மஹிந்தவை பிரதமராக்குவதாகவும் அதற்காக, லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் தெரிவித்திருந்தனர் என ​சம்பாஷானையை ஆரம்பித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் இதையேதான் கூறியிருந்தனர்” எனக்கூறி சிரித்துவிட்டார்.   

“ஒன்றிணைந்த எதிரணிக்குள் தற்போது, உள்ளுக்குள்ளேயும் ஆர்ப்பாட்டம், வெளியிலேயும் ஆர்ப்பாட்டம். எனினும், வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம்” என்று பதிலளித்த பிரதமர் ரணில், “அவர்களைப் போல துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தி, மனிதர்களை கொன்றொழித்து, கை, கால்களை உடைக்கமாட்டோம்” என்றார்.   

“இல்ல சேர், பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதாக இராப்பகலாகத் தெரிவித்துவந்த மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத்தான் கேட்கின்றார்” என சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.   

“நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்தை யாருக்கும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. ஆகக் கூடுதலான உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கே, பிரதமர் பதவி கிடைக்கும். அதற்கடுத்ததாக, ஆகக் கூடுதலான உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கே, எதிர்க்கட்சி பதவி வழங்கப்படும். அதில், இரண்டாவதாக ஆகக் கூடுதலான உறுப்பினர்கள் கொண்ட கட்சி, அரசாங்கத்துடன் இருக்கின்றது என்பதனால், மூன்றாவதாக ஆகக் கூடுதலான உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும்” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வியாக்கியானத்துடன் தெளிவுபடுத்தினார்.   

லக்ஷ்மனின் கூற்றை, அங்கிகாரிக்கும் வகையில் தலையை அசைத்த பிரதமர், “இவர்கள் அதனைப் புரிந்துகொள்ளாமல், சபாநாயகருடன் பொய்யாக சண்டை போடுகின்றனர்” என்றார்.   

அவ்விடத்திலிருந்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விடவும், அலைபேசியில் ஊடாக, மஹிந்த ஏசியதுதான், இப்போது பெரிதாக பேசப்படுகின்றது. அதுவும் ஒன்றிணைந்த எதிரணியினால், திட்டமிட்டு செய்யப்பட்டதாக​வே கூறப்படுகின்றதெனப் போட்டுடைத்துவிட்டார்.   

அது என்ன கதை என அங்கிருந்தவர்களில் சிலர் கேட்க “எம்பிலிப்பிட்டிய விஹாரைக்கு மஹிந்த வராமல், சமல் போனதுக்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்புக் குரலெழுப்பினார்கள் அல்லவா? ஆமாம், அதற்கென்ன, அப்போது, ஏற்பாட்டாளருக்கு கோல் எடுத்த மஹிந்த, கண்மூடிதனமாக திட்டித்தீர்த்துவிட்டார். அதுதான் பெரிய கதையாக இருக்கிறதென, புட்டுபுட்டு வைத்தார் நவீன்.   

அப்படியா கதையென, கேட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் நின்றிருந்த அமைச்சர் தயா கமகே, “விசேட மேல் நீதிமன்றங்களை, தாங்கள் ஆட்சிபீடமேறியவுடன் கலைத்துவிடுவோமென, பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அப்படிச் செய்யமுடியுமாவென வினவினார்.   

“அதற்குதான் சொல்வது, சட்டம் தெரியாதவர்கள் என்று. உடதலவின்ன மற்றும் வித்தியா படுகொலை உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் யாவும் விசேட மேல் நீதிமன்றங்களிலேயே இடம்பெற்றன” அவை தொடர்பில், அவர்களுக்குத் தெரியாத என்ன? என்று, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெளிவுபடுத்தினார்.   

அதனைவிடவும், பகடிவதைக்கு எதிராக, 10 வருடங்கள் அதுவும் பிணையில்லாத சிறைத்தண்டனை வழங்கும் சட்டத்தைக் கொண்டுவருது எதிர்கால மாணவர் சமூகத்துக்குச் செய்யும் விசாலமான சேவையாகுமென குறிப்பிட்ட சமிந்த விஜயசிறி, விஜயதாஸவின் இந்தச் சேவைக்காக, சகலருமே பாராட்டுகின்றனர் என்று பாராட்டு மழையை பொழிந்துவிட்டார்.   

குறுக்கிட்ட தயா கமகே, “எடுத்த எடுப்பிலேயே, சின்ன கார்களுக்கான வரி, தலைக்குமேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் புலம்புகின்றனர்” என்றார்.  

அதற்குப் பதிலளித்த, பிரதமர் ரணில், “தற்போதைக்கே, வீதிகளில் பாரிய நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. வாகனங்களால் வீதிகள் நிரம்பிவழிகின்றன. மக்கள் அதற்கும் ஏசுகின்றனர். அரசு கடனில் ஓடிக்கொண்டிருப்பதனால், புதிய வீதிகளை நிர்மாணிப்பதற்கு நிதி இல்லை. தூண்களுக்கு மேலே பயணிக்கும் கோச், வந்ததும், வீதிகளில் நெரிசல்கள் குறையும், வரிகளும் குறையும்” எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X