2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘துரோகம் அரங்கேறுகிறது’

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் படையினரை, வெளிநாட்டுச் சக்திகளிடம் காட்டிக்கொடுக்கும் பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் துரோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

இந்த நாட்டின் நீண்டகால வரலாற்றை உற்றுநோக்கும் போது, நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் காணப்பட்டனரென்றும் தெரிவித்துள்ள அவர், என்றாலும், இவ்வாறு ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் துரோகம் செய்துகாட்டிக்கொடுக்கும் ஆட்சியாளர்கள், ஒருபோதுமே இந்த நாட்டில் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஊடகங்களுக்கு நேற்று (17) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், தற்போதைய அரசாங்கத்தால், குற்றவியல் சார்ந்த விடயங்களிலான பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று, 2002ஆம் ஆண்டு ஆரம்பச் சட்டத்தை ஒப்பிட்டு நினைவுறுத்தியுள்ளார்.  

அதில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“ஆரம்பச் சட்டத்தின் நோக்கம், நாடுகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் அல்லது சாட்சியாளர்கள் இலங்கையில் இருப்பார்களாயின் அல்லது இந்நாட்டுக்குத் தேவையான அவ்வாறான நபர்கள் வேறு நாடுகளில் இருந்தார்களாயின், அவர்களை இனங்கண்டுகொள்ளல் மற்றும் தேடியறிதல், அவ்வாறான நபர்களுக்கு அழைப்பாணை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல், சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளல், அதனடிப்படையில் சாட்சிகளுக்கான ஆதாரங்களைத் தேடுதல், வழக்குப் பொருட்களுக்கான ​சோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் அவற்றைக் கைப்பற்றிக்கொள்ளல் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தன.  

“அதுமட்டுமன்றி, சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல், குற்றச்செயல்களின் மூலமாக திரட்டப்பட்டச் சொத்தை ​​அபகரித்தல், அவ்வாறான சொத்துகளை இடைநிறுத்தல் ஆகிய காரணங்களின் போது, வெளிநாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான பரஸ்பர ஒத்துழைப்புடன் நடந்துகொள்ளல்.  

“இந்தச் சட்டமானது, பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகள் சிலவற்றுக்கும் இவ்வாறான செயற்பாடுகளின் போது, இலங்கையுடன் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடுகள் சிலவற்றுக்குமே மட்டுப்படுத்தப்பட்டதாகும்.  

“எனினும், ஆரம்பச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டதன் ஊடாக, சட்டமூலத்தின் வடிவத்தில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்படும். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளுக்குள், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச அமைப்புகள் உள்நுழைந்துள்ளன.  

“வேறு நாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துமூல சாட்சி மற்றும் வேறு நாடுகளில் இருக்கின்ற நபர்களினால், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட சாட்சிகள் ஆகியவற்றை, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

“வெளிநாடுகளிலிருந்து வரும் கோரிக்கைகளுக்கு விரைந்து பதிலளிக்கக்கூடிய வகையில், குற்றவியல் சார்ந்த விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்காக, நிர்வாகப் பொறிமுறையை பாரியளவில் வியாபிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  

“இந்தத் திருத்தமானது, இன்னுமிரண்டு சட்டத்துடன் பிணைந்துள்ளது. அது, காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் காணாமற்போவதைத் தடுப்பதற்கான சர்வதேச சாசனத்தை நாட்டுக்குள் செயற்படுத்துவதற்கான சட்டங்களாகும்.  

“அவற்றிலிருக்கும் ஏற்பாடுகளின் பிரகாரம், இலங்கைக்குள் காணாமற்போனதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை, தங்களிடம் ஒப்படைக்குமாறு, அந்தச் சாசனத்தின் ஊடாக, வெளிநாடுகள் கோருவதற்கான அதிகாரமும் உள்ளன.  

“இவ்வருடம் மே மாதம் 18ஆம் திகதியன்று, அதாவது புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு ஒன்பது வருடங்கள் நிறைவடைந்த நாளன்றே, குற்றவியல் சார்ந்த விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

“அந்தச் சந்தர்ப்பத்தில், நாட்டின் பல்வேறான பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, மக்களது கவனம் வேறுபக்கத்துக்குச் சென்றிருந்தது. இந்த நாட்டின் நீண்டகால வரலாற்றை உற்றுநோக்கும் போது, நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் காணப்பட்டனர். என்றாலும், இவ்வாறு ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் துரோகம் செய்து காட்டிக்கொடுக்கும் ஆட்சியாளர்கள், ஒருபோதுமே இந்த நாட்டில் இருந்ததில்லை” மஹிந்த ராஜபக்‌ஷ, தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .