2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நாடு முக்கியமல்ல; வீடு தான் முக்கியம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்ஷன்

 

வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகள், மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 

வடக்கு மக்கள், கல் வீட்டுத் திட்டத்தையே விரும்புகின்றனர் எனத் தெரிவித்த, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அத்திட்டத்தை, இந்தியாவே முன்வைத்துள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில், இந்தியாவையும் சீனாவையும் சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.

இத்திட்டங்களில் எத்திட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும், அதில் அந்நாடுகளின் தலையீடுகள் உள்ளனவா என்பது தொடர்பாகவும், அண்மைக்காலத்தில் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக, அதன் பேச்சாளரிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"சீன நிறுவனமும், 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக, தனது திட்ட முன்மொழிவைக் கொடுத்துள்ளது. ஆனால், அது கல் வீடல்ல. கொங்கிறீட் போன்ற ஒன்றால் அமைக்கப்படும் வீடாகும். ஆனால் இந்தியா, அதே பணத்துக்கு, கல் வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

"எமது மக்களுக்கு, கல் வீடே விருப்பம். எனவே, இந்தியாவுடன் பேசி, அவ்வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்குமாறு, அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, "அப்படியாயின், இந்திய வீட்டுத் திட்டத்தைத் தான் கூட்டமைப்பு விரும்புகின்றதா?" என அவரிடம் மீண்டும் வினவிய போது, "கல் வீட்டுத் திட்டத்தைத் தான், கூட்டமைப்பு விரும்புகின்றது. இனி நீங்கள் செய்தி எழுதும் போது, இந்தியா, சீனா என்று எழுதுவீர்கள். அதற்காக தான் மறுபடியும், இந்தியாவா, சீனாவா என்று கேட்கின்றீர்கள்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கல் வீட்டுத் திட்டத்தைத் தான் விரும்புகின்றது. அதனைத் தான், எமது மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, இந்தியாவோ, சீனாவோ இல்லை ரஷ்யாவோ யார் கல் வீட்டைக் கட்டினாலும், நாம் ஏற்றுக்கொள்வோம். எமது மக்களுக்குத் தேவையான, விருப்பமான கல் வீட்டுத் திட்டத்தை நடமுறைப்படுத்த வேண்டும் என்பது தான், கூட்டமைப்பின் நிலைப்பாடு" என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .