2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சரவையில் ”பச்சை மாற்றம்”

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

​கடந்த சில வாரங்களாக, பெரும் பரபரப்பாக பேசப்பட்ட, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று (25) மேற்கொள்ளப்பட்டது. 

இது, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றமாகும். இதன்போது, 10 அமைச்சுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 09 ஐ.தே.கவினர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுகளாகும்.

பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற, 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், அவை தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை செலுத்தியிருந்தன. 

அதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலக வேண்டும், நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், பிரதமரைப் பதவிநீக்கிவிட்டு, புதிய ஒருவரைப் பிரதமராக நியமிக்க முடியுமா? அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறதா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. 

ஒருகணத்தில், இந்த விவகாரம் தொடர்பிலான வியாக்கியானத்தைக் கேட்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்தை நாடவிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நல்லாட்சி அரசாங்கத்திலும், தேசிய அரசியலிலும் நெருக்கடியை தோற்றுவித்துவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதி வெகு கவனமாக இருந்தாரென உள்வீட்டுத் தகவல் தெரிவித்திருந்தது.  

அதையடுத்தே, பிரதமரை நீக்குவது தொடர்பில், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கேட்கும் தீர்மானத்தை அவர் கைவிட்டார் என்றும் அறியமுடிகின்றது. 

அதன்பின்னர், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்​டமைப்பு ஆகியனவற்றுக்கிடையில் பலசுற்றுப் ​பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

அதன் அடிப்படையிலே​யே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டது. இரு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் இரு தரப்பினராலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.  

அதில், அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவியை வழங்கவேண்டுமென்ற கோரிக்கை, ஐ.தே.கவினரால் முன்வைக்கப்பட்டிருந்தது. 

அந்தக் கோரிக்கைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார் என்றும் அதன்பின்னரே, அந்தக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது. எனினும், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் சரத் ​பொன்சேகாவுக்கு மேலதிகமாக, பதவியொன்று வழங்கப்படக் கூடுமென உள்வீட்டுத் தகவல் தெரிவிக்கின்றது.   இந்த அமைச்சரவை மாற்றமானது, ஐக்கிய தேசியக் கட்சியினரை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனால், அக்கட்சியின் நிறத்தைக் கொண்டு, பச்சை நிற அமைச்சரவை மாற்றமெனப் பலரும் கூறுகின்றனர். 

நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படக்கூடுமென, எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், அவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவில்லை.  இதேவேளை, 69 வயது 45 நாட்களுமேயான சிரேஷ்ட அரசியல்வாதி பியசேன கமகே, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதைச் சமூக ஊடகங்கள் வெகுவாக விமர்சித்திருந்தன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து பரிமாற்றியுள்ளவர்கள், 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலும் திஸ்ஸ கரலி​யத்த, பெண்கள் விவகார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். 

ஆண் அமைச்சரொருவர், பெண்கள் விவகார அமைச்சராகப் பதவிவகிக்க முடியுமாயின், ஆண் அமைச்சரொருவர், இளைஞர் விவகார அமைச்சராக ஏன் பதவிவகிக்க முடியாதென, பதிலளித்து கேள்வியெழுப்பியிருந்தனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவருடைய அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.  

முன்னாள் அமைச்சரான சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சை முறையாகப் பயன்படுத்தவில்லையென, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இதேவேளை, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடமிருந்து, அவ்விரு அமைச்சுகளும் பறிக்கப்பட்டு, அமைச்சர் கபீர் ஹாசீமிடம் வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் தொடர்பிலான விலைமனுக் கோரல்களின் போது, அமைச்சர் கிரியெல்ல முறைக்கேடாக நடந்துகொண்டாரென, அவருக்கெதிராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .