2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’பலத்தை காட்டுவோம்’

Kamal   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் ஆசைக்கு, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனரெனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிமசிங்க, மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் கோரினார்.  

நீதிமன்றம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த புதிய பிரதமருக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக, இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளதென்றும் இவற்றுக்கு, நிறைவேற்று அதிகாரம் செவிசாய்க்காவிட்டால், மக்கள் பலத்தைக் காட்டவும் தயாராகவுள்ளதாகவும், அவர்  கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு, தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று, அலரி மாளிகையில், நேற்று (10) இடம்பெற்றது. இதன்போதே, விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அரசமைப்புக்கு முரணான செயற்பாடு, இன்று மக்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் இது, மக்கள் உரிமையைத் திருடும் செயற்பாடென்றும் கூறியதோடு, பிரதமர், அமைச்சர்களைப் பதவி நீக்கியதால், மக்களே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.

நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ளவர்களுக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அந்த பெரும்பான்மையை யாருக்கு வழங்க வேண்டுமென்பதை, மக்களே தீர்மானிப்பர் என்றும் கூறிய ரணில் விக்கிரமசிங்க,  மறைந்த தலைவர் டி.எஸ்.சேனநாயக்கவின் காலத்திலிருந்து, இதுவே நடைமுறையில் உள்ளதென்றும், பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் தரப்புக்கு மதிப்பளித்தே பிரதமரைத் தெரிவுசெய்து வந்தோமென்றும் கூறினார்.

அதற்கமையவே, 2003ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின் போது, பிரதமராகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததெனத் தெரிவித்த அவர், இன்று, நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாமல் பிரதமரை நீக்கி, அமைச்சரவையைக் களைத்துவிட்டு ஆட்சிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவும் நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட்டாரெனக் குற்றஞ்சுமத்திய ஐ.தே.மு தலைவர், அதனால், இன்று நாடளாவிய ரீதியில் மக்கள் எதிர்ப்பு வெளிப்பட ஆரம்பித்துள்ளது என்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதற்குப் புறம்பாகச் செயற்படும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், மஹிந்தவின் பிரதமர் ஆசைக்கு எதிராக, பெரும் மக்கள் எதிர்ப்பு வெளிப்பட ஆரம்பித்துள்ளதென்றும் சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடுக்கு எதிரான முன்வந்த அணியினர், தற்போது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளனர் என்றும் நல்லாட்சியில் குறைபாடுகள் இருந்த அதேவேளை,  நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் உள்ளன என்றும் அதற்கமையவே, அரசாங்கம் சிறந்ததா? இல்லையா? என்ற தீர்மானத்தை மக்கள் எடுப்பரென்றும் கூறியதோடு, அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் வேறு தரப்புகளுக்கு
இல்​லையென்றும் சுட்டிக்காட்டினார்.

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தியதன் விளைவாக நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மேம்பட்டுள்ளது. அதனால் தான், நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதேபோல், அண்மைய நாள்களில் அரசியல்வாதிகளின் பங்கேற்புகள் இல்லாத பல எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பின்னர், மக்கள் பலத்தைக் காண்பிக்கும் போராட்டங்களை நடத்துமாறு, சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைய, குறித்த போராட்டம் அடுத்த வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இது, மக்கள் போராட்டமாகவே அமையும். எனவே அச்சமின்றி மக்கள் வாழக்கூடிய ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்” என, அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .