2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரமதாஸவே ஆயுதம் கொடுத்தார்; ‘நானே சாட்சி’

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தான் அம்பாறையில் கூறியிருந்த கருத்தை வைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், தனக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

“தன்னைக் கைது செய்யுமாறு சஜித் கூறிவருகிறார். என்னை எப்படி கைதுசெய்ய முடியும்? நாட்டில் நிலவிய கொடிய யுத்தத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறைவுக்கு கொண்டுவந்தவர்கள் நாங்கள்தான்” எனவும் தெரிவித்தார்.

அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த கருணா அம்மான் தெரிவித்த கருத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுத் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர், இந்திய அமைதிப்படையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தத்துக்குப் பின்னர், புலிகள் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் இதன்போது, அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவே புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்றும், அதற்குத் தானே சாட்சியெனவும் தெரிவித்தார்.

“எனவே, என்னைக் கைது செய்வதற்கு முன்னர், சஜித்தைத்தான் கைதுசெய்ய வேண்டும்” எனவும் கூறிய அவர், சொந்த சிங்கள மக்களையே ஜே.வி.பியினர் படுகொலை செய்ததாகவும் சாடினார்.

யுத்தம் எந்தளவு கொடூரமானதாக இருந்தது என்பதற்காகவும் அப்படியான கொ‌‌டூரமான யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற நோக்கத்திலேயே, தான் அந்தக் கருத்தைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கியிருந்தார். அந்த ஆயுதங்களைக் கொண்டே, புலிகள் இராணுவ வீரர்களுக்கு எதிரானப் போராட்டத்தை மேற்கொண்டனர்” என்றார்.

அதுபோல, மக்கள் விடுதலை முன்னணியினராலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவரங்கள் போன்ற சம்பவங்களினூடாக பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

யுத்தம் எந்தளவு கொடூரமானதாக இருந்தது என்பதற்காகவும் அப்படியான கொ‌‌டூரமான யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற நோக்கத்திலேயே தான் அந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாகவும், கருணா மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .