2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிற்பகல் 2.02க்கு ‘மங்கல’ பாதீடு

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு - செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (25) சமர்ப்பிக்கவுள்ளது. 

அடுத்த வருடத்தில் பல தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதால், மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கக்கூடிய வகையில், இந்த வரவு - செலவுத் திட்டம் அமையலாமென, பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.  

அதுமட்டுமன்றி, நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையிலான திட்டங்களை ​கொண்டிருக்கும் வகையிலேயே, இன்றைய வரவு - செலவுத் திட்ட யோசனைகள் அமைந்திருக்குமென்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதுடன், அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பதில்கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், இன்று (05) பிற்பகல் 2 மணிக்குக் கூடும். அதன் பின்னர், 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர, பிற்பகல் 2.02க்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, சம்பிரதாயபூர்வமான பெட்டியில், ​வரவு - செலவுத் திட்ட யோசனைகளை எடுத்துவருவரா? அல்லது கோவையிலேயே கொண்டுவருவாரா? என்பது தொடர்பில், இரகசியம் காக்கப்படுவதாக, நிதியமைச்சுத் த​கவல்கள் தெரிவிக்கின்றன.  

இதனையொட்டி, நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்தில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம்.பிக்களின் அறைகள் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் விசேட சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் வருகைதரும் வாகனங்களைத் தவிர, ஏனைய உறுப்பினர்களின் வாகனங்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களின் வாகனங்களுக்கும் விசேட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இன்றையதினம் சகல கலரிகளும் அழைக்கப்பட்ட அதிதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், ஏனைய விருந்தினர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.  

இதேவேளை, வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், விசேட அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்றுகாலை நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.  

2019ஆம் ஆண்டு நிதி ஒருக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம், சனிக்கிழமை உட்பட, 26 நாள்களுக்கு காலை முதல் இடம்பெறும். மார்ச் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதமும், இடம்பெறும், அன்றிலிருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் அமைச்சுகள் மீதான விவாதமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை 6 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.  

இந்நிலையில், இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சகலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் முயற்சியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிகள் முயற்சித்துவருகின்றனர் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அன்றையதினம், கட்டாயமாக அவையிலிருக்கவேண்டுமென, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவுறுத்தியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X