2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய அரசமைப்பு கடனை அடைப்பதற்கான ‘சூழ்ச்சி திட்டம்’

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்   

“2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்காக உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி செய்தோரின் கடனை அடைக்கவே, இந்தப் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முயற்சிக்கின்றது” என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

அரசமைப்புக்கான அரசமைப்புச் சபை வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (02) நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,  

“நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. நல்லிணக்கம் இல்லை. ஜனநாயகமும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசமைப்பு ஒன்று அவசியமா என எண்ணத் தோன்றுகிறது.  

“அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் நாம் மிக நேர்மையாகக் கலந்துகொள்கின்றோம். வழிநடத்தல் குழுவுக்கும் நாம் நேர்மையாகவே, எமது யோசனைகளை முன்வைத்தோம். இந்த அரசமைப்புத் தொடர்பான யோசனைகள் கோரப்பட்டபோது, எமக்குச் சந்தேகம் இருந்தது. ஆனாலும், நாம் எமது பங்களிப்பை வழங்கினோம். எமது நாட்டை, இனத்தைப் பற்றிச் சிந்தித்துக் கலந்துகொண்டோம்” என்றார்.  

“ஆனால், இன்றைய நிலையில், இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் திருப்திப்பட முடியாத நிலை உள்ளது. உப-குழுக்களின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளைக் காணவில்லை. வழிநடத்தல் குழுவில் 21 பேர் அங்கம் வகித்தார்கள், அவர்களில் 15 பேர் மாற்றுக் கருத்துடையவர்களாகவே இருக்கின்றார்கள்” என்றும் குறிப்பிட்டார்.  

“வடக்கு, கிழக்கை இணைப்பது பற்றி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா என எனக்குத் தெரியவில்லை. நான் முஸ்லிம்களுடன் கலந்துரையாடியபோது, அவர்கள் அதற்கு எதிரப்பையே வெளியிட்டிருந்தார்கள். வடக்கு, கிழக்கை இணைத்தால் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்” என்றார்.  

“இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் ஆரம்பித்தது முதல் நான் கவனித்து வருகின்றேன். இங்கு என்னுடைய பெயர் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நாம் எப்போதோ முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், கலந்துரையாடல் மேசைக்கு வந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பலர் தயங்கினார்கள். வழமைபோன்று, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டது. அன்று நாம் வழங்கிய தீர்வுப் பொதியை எரித்தவர்கள், இன்று வீர வசனம் பேசுகிறார்கள்” என்றார்.  

“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை என்பதை இந்த அரசாங்கம் உணர வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது, விஞ்ஞாபனத்தில் ஒன்றைக் குறிப்பிட்டு, மேடையில் இன்னுமொன்றைப்பேசினார்” என்றார்.  

“நாட்டில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், வடக்கில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். புதிய அரசமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கத்துக்குரிய அதிகாரம் குறைக்கப்படுகின்றது. மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கப்படும்போது, நாடாளுமன்றம் சக்தியற்றதாகிவிடும். அப்படியானால், மக்கள் சேவையாற்றுவதற்காக இங்கே வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனிமேல் மாகாண சபைக்குப் போட்டியிடப் போகிறார்கள். அதாவது, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அவ்வாறு போட்டியிடபோகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“நாம் யுத்தத்தை நிறைவு செய்த பின்னர், வடக்கு மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதைப் பற்றிச் சிந்தித்தோம். அங்கு வீதி அபிவிருத்தி போன்ற அபிவிருத்திப் பணிகளைச் செய்த அதேவேளை, அவர்களுக்குரிய தீர்வுகளை எவ்வாறு வழங்குவது என்பது பற்றியும் அக்கறை செலுத்தியிருந்தோம்.  

“13 பிளஸ் பற்றிய பேச்சுகளை, இந்த விவாதங்களில் நான் கேட்டேன். இது பற்றி அப்போதே எங்களோடு கலந்துரையாடியிருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என்பதை நான் பலதடவைகள் வலியுறுத்தி வந்திருக்கின்றேன். வடக்கு அபிவிருத்தி குறித்து எமக்கு நீண்டகால நோக்கு இருந்தது” என்றார்.  

“வடக்கில் தமிழ் மக்களுக்கு இப்போது என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். வறுமை காரணமாக பலர் நஞ்சருந்துகின்றார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வாழ்வாதாரப் பிரச்சினை இருக்கிறது. அரசாங்கம் முதலில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

“அவ்வாறு தீர்க்காமல், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் முன்னுரிமை அளிப்பது கவலையளிக்கின்றது. நிறைவேற்று அதிகார முறைமை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்வைக்கப்பட வேண்டும். நாங்கள் நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கின்றோம். இங்கே 55 பேர் என்பது சிறு எண்ணிக்கையானவர்கள் அல்லர். நாங்கள்தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான எதிர்க்கட்சியினர்” என்றார்.  

“2015ஆம் ஆண்டு தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்காக உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி செய்தோரின் கடனை அடைக்கவே, இந்தப் புதிய அரசமைப்பைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போயுள்ள நிலையிலேயே, இந்த விவாதத்தில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு, அவற்றின் அனைத்து அதிகாரங்களும் ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று கிழக்கு பற்றி இங்கு பேசுகின்றனர். ஆனால், அந்த மாகாணத்தின் அதிகாரம், ஆளுநரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.   

“காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமல்லாது நிதி அதிகாரத்தையும் மாகாண அலகுகளுக்கு வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாகாண அலகுகளுக்கு அதிகாரங்களை வழங்கியதன் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாலும் சர்வஜன வாக்கெடுப்பாலும் கூட இந்த அதிகாரங்களை மீளப்பெற முடியாத வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என்றார்.  

“ஆகவே, இன மற்றும் மத ஒற்றுமையையே நாம் எப்போதும் எதிர்பார்க்கின்றோம். ஆகையால், இந்த அரசியலமைப்பு உருவாக்கத்தால் இனங்களுக்கும் அதேபோல், மதங்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய குரோதங்களைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .