2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’புதிய அரசமைப்புத் தொடர்பில் எம்.பிகள் தெரியாமல் கதைக்கின்றனர்’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்புத் தொடர்பாக, உண்மையான விவரங்களை அறியாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதைக்கின்றனர் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (22) குற்றஞ்சாட்டினார்.  

கொலன்னாவை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வைபவம், அலரி மாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.  

“கட்சிகளின் பதில்களையும் இடைக்கால அறிக்கையில் இணைத்துக் கொள்வதற்கு நாம் முடிவெடுத்தோம். அதன்மூலம், விவாதத்துக்கு வருவதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் படிக்க முடியும். இல்லாவிடில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரியான தகவல்களை அறியாமல், சில விடயங்களைக் கூறுகின்றனர்” என, பிரதமர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே ஊடகங்கள் மீது, குறிப்பாக பத்திரிகைகள் மீது, விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்த பிரதமர், இந்நிகழ்விலும் ஊடகங்கள் மீது தனது விமர்சனத்தை முன்வைத்தார்.  

“இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு, துரிதமான நடவடிக்கையொன்றைப் பின்பற்ற, நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறானவை பற்றிய செய்தி அறிக்கைகள் தான், பிரதான செய்தியாகவோ அல்லது முதற்பக்கச் செய்தியாகவோ அமைய வேண்டும். ஆனால், புதிய அரசமைப்பை எதிர்ப்பவர்களுக்கே, அச்சு ஊடகங்கள் இடம் வழங்குகின்றன. 

“புதிய அரசமைப்பு, இன்னும் தயாரிக்கப்படவில்லை. அரசமைப்புக்கான வரைவென ஒன்று இருக்குமாயின், அதைக் காட்டுங்கள். மக்களை, இந்த வகையில் தவறாக வழிநடத்தாதீர்கள். ஊடகங்கள், மக்களை இவ்வாறு பிழையாக வழிநடத்திக் கொண்டிருந்தால், இறுதியில் மக்கள், ஊடகங்களுக்கு எதிராகச் செல்வர்” என்று அவர் எச்சரித்தார்.  

‘இழப்பீட்டில் அரசாங்கம் துரிதம்’
தற்போதிருக்கும் நிலைமையின்படி, மண்சரிவால் பாதிக்கப்பட்ட 70,000 குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என, பிரதமர் இங்கு தெரிவித்தார். “2016ஆம் ஆண்டில், வெள்ள, மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கென, 3.6 பில்லியன் ரூபாய், இழப்பீடாக வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, இவ்வாண்டில் இதுவரை 1.3 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.  

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும், நவம்பர் இறுதிக்குள், அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் நான் பணிப்புரை விடுத்துள்ளேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்குப் பகுதி இடங்களுக்கு, நவம்பரில் நான் செல்வேன்.

வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காணப்படும் முன்னேற்றத்தை நேரில் பார்வையிடுவதற்காகவே செல்லவுள்ளேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடுகளை, அரசாங்க மதிப்பீடுகளுக்கு ஏற்ப வழங்குமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நான் பணித்துள்ளேன். மக்கள் மேன்முறையீடு செய்தால், இன்னும் அதிகமாக வழங்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.  

வழக்கமாக, இழப்பீடு வழங்குவதற்கு ஐந்தாண்டுகள் செல்லும் எனத் தெரிவித்த அவர், ஆனால் இவ்வரசாங்கம், அதைத் துரிதப்படுத்தியுள்ளது எனவும், இழப்பீடுகளை வழங்குவதைத் தாமதித்தால், மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.  

இலங்கை, அண்மைக்காலமாக இயற்கை அழிவுகளுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் நிலையில், பூகோள காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்காக, இலங்கையைத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .