2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மக்கள் நலன்சார் பாதீடு வரும்’

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்   

சகல சவால்களையும் வெற்றிகொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும் சகல சவால்களுக்கும் பலமாக முகங்கொடுப்போம் என்றும், 51 நாள்கள் நீடித்த பாதிப்பில் இருந்து நாட்டை உயர்த்துவற்குத் தாம் தயாரென்றும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அது இலகுவான காரியமல்ல என்றும் அது கடினமானதாக இருக்கும்; கஷ்டங்கள் எழும்; இவற்றுக்கு மத்தியில், மக்கள் நலன்சார் வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) வரும் என்றார்.   

நாட்டின் ஜனநாயகத்துக்கும் மக்களின் இறைமைக்கும் ஏற்பட்ட சவாலுக்கு முகங்கொடுத்து, மீண்டும் பொருளாதாரத்தையும் மக்களின் இறைமையையும் மீண்டும் தூக்கிநிறுத்தியது போன்று, பொருளாதாரத்தையும் உயர்த்தி வைப்போமென்று நம்பிக்கையூட்டிய பிரதமர், ஜனவரி 14ஆம் திகதிக்குள், 2,600 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தவேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10), விசேட உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடன் சுமையிலிருந்து தந்திரரோபாயமாக மீள்வதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் எனினும், ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னரான செயற்பாட்டினால், எல்லாமே அதிர்ந்து விட்டதென்றும் கூறினார்.

2015இல் தாம் நாட்டைப் பொறுப்பேற்கும் போது, முழு நாடும் பாரிய கடன் பொறியில் சிக்கியிருந்தது என்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், பொருளாதாரத்தை நிலையான இடத்துக்கு உயர்த்திவைக்க நடவடிக்கை எடுத்தோமென்றும் தெரிவித்த அவர், அரசியல், சமூக, பொருளாதாரச் சவால்கள், எம் முன்பாக இருக்கின்றன என்றும் நினைவுபடுத்தினார்.

இந்த வருடத்தில், பொருளாதாரத் துறையில் பாரிய சவால் காத்திருக்கிறது. அதிக கடன் தொகையை, இந்த வருடம் செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டி என்பவற்றைச் சேர்த்து, 2019ஆம் ஆண்டில், 5,90 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டுமெனக் கூறிய பிரதமர், இலங்கை வரலாற்றில், பாரிய கடன் தவணையாக, ஜனவரி 14ஆம் திகதியன்று, 2,600 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறினார்.

கடந்த ஆட்சியில் பெறப்பட்ட கடனை, பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மீளச் செலுத்துவதற்கான திட்டமொன்றைத் தயாரித்திருப்பதாகவும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்துதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்தல் போன்றத் திட்டங்களைத் தாம் செயற்படுத்தி இருந்தோம் என்றும், பிரதமர் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில், சர்வதேசப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக, இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் பெறுமதியைப் பேணுவதற்காக, மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தோம் என்றும் ஆனால், ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக, சகல நடவடிக்கைகளும் தடைப்பட்டன என்றும் கூறினார்.

51 நாள்கள் நீடித்த அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையால், ஸ்தீரமாக இருந்த எமது பொருளாதாரத்தின் மீது, பெரும் இடி விழுந்தது. பொருளாதார வளர்ச்சி வீதம் தடைப்பட்டது. ரூபாயின் பெறுமதி மேலும் குறைவடைந்தது என்றுத் தெரிவித்த அவர், இக்காலப்பகுதியில், எந்த நாட்டிடமிருந்தோ சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தோ, கடனோ உதவியோ பெற்றுக்கொள்வதற்கு இலங்கையால் முடியவில்லை என்றார்.

இக்காலப்பகுதியில், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், கருத்திட்டங்கள் தடைப்பட்டன. இந்தக் காலப்பகுதியில், பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதத்தை ஒரேயடியாகக் காணமுடியாது. இதனால், நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு, பெரும் பாதிப்பு ஏற்படுமென, பிரதமர் கூறினார்.

51 நாள்களில், இழந்த பொருளாதார அபிவிருத்தியை மீளக் கட்டியொழுப்புவதற்கு, கால அவகாசம் தேவைப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிட்டது. அவர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தெரிவித்த அவர், நாட்டில் அரசியல் ஸ்தீர நிலைமை காணப்படுவதாக, சர்வதேசச் சமூகத்துக்கு காண்பிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் குறிப்பாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றார்.

“சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டது. பலர் இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்திருந்தார்கள். 51 நாள்களில், ரூபாயின் பெறுமதி, 3.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டுக் கையிருப்பு, 7,991.5 மில்லியன் டொலரில் இருந்து 6,985.4 மில்லியன்களாக வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் பெறுமதி குறைவடைந்ததால், நாட்டுக்குக் கொண்டுவரும் மூலப்பொருட்களின் விலைகள் உயரும். இதனால் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும்” என்றார்.

“அதனை முகாமைத்துவம் செய்து, ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்ததை விட சிறந்த நிலைக்கு நாட்டை மீள உயர்த்துவது, எமது பொறுப்பாகும். வாழ்க்கைச் செலவைக் குறைத்து, மக்கள் வாழக்கூடிய வகையிலான சூழலை உருவாக்க இருக்கிறோம்.

சுற்றுலாத் துறையில், துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். 2018 ஒக்டோபர் 27ஆம் திகதியில் இருந்து 51 நாள்கள், எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட அதிர்விலிருந்து மீள எழுச்சி பெறுவது குறித்தும் கூற வேண்டியுள்ளது” என்றார்.

அரசியலில் எமக்குப் பல்வேறு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கின்றன. அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால், நாடு குறித்துச் சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தின் மீது குற்றஞ்சாட்டுவதால் மாத்திரம் எதிர்காலத்தை வளப்படுத்த முடியாது என்று தெரிவித்த பிரதமர், பலவீனமான மற்றும் தவறான பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தியதால், எமது நாட்டின் மீது கடன் சுமை ஏற்றப்பட்டது. இதற்காகப் பெருமூச்சு விடுவதன் மூலம் மாத்திரம், நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பிவிட முடியாது என்றார்.

“இதற்காக, காத்திரமான திட்டம் தயாரிக்க வேண்டும். மூலோபாயங்களை உருவாக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு நான் 2016 ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறியிருந்தேன்.

“51 நாள்கள் நீடித்த ஸ்தீரமற்ற நிலைமை காரணமாக, கடுமையாகக் கஷ்டப்பட்டு செயலாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிகளவில் அர்ப்பணிக்க நேரிட்டுள்ளது. அதிக சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது” என, பிரதமர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X