2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மழையும் சூறாவளியும் ஓரிரவில் புரட்டிப் போட்டன

Editorial   / 2017 டிசெம்பர் 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நீடித்துவரும் கடும் காற்று மற்றும் ஓயாத மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையில் சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

கடந்த 48 மணி நேரத்தில், அனர்த்தங்களில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர் என்றும் மத்திய நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மையம், கொழும்பிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலான மேற்கு ஆழ்கடலில் சூறாவளியாக மாறி, நாட்டின் மேல் மற்றும் வடமேல் திசைகளை நோக்கிப் பயணிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியது.

இதனால், நாட்டின் விசேடமாக தென்மேற்குப் பகுதிகளில், கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மேல் மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் கடும் மழையுடன் காற்று அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவித்த வானிலை அவதான நிலையம் காற்றின் வேகம், மணிக்கு 90 முதல் 100 கிலோமீற்றராகக் காணப்படும் என்றும் குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், இந்நிலைமை இன்று (01) முதல் படிப்படியாகக் குறைவடையும் என்றும் நிலையம் குறிப்பிட்டது.
சிவப்பு அறிவிப்பு

இந்நிலையில், ​அதிக மழை, கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில், சிவப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம், தெற்கு, சப்ரகமுவா, மத்தி, ஊவா மற்றும் மேல் மாகாணங்களுக்கு, 100 முதல் 150 மில்லிமீற்றர் மழை பெய்யும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்ககு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“காலி, மாத்தறை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகள், மண்சரிவுக்கு உள்ளாகும் நிலைமை காணப்படுகின்றது.

“காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, யக்கமுல்ல, பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொட்டபொள பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், இந்த மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது.

“இதேவேளை, இரத்தினபுரியின் இம்புல்பே, கொலன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவும் மாத்தளை மாவட்டத்தின் எல்கடுவ மற்றும் லக்கல பல்லேகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை, வெலிமடை மற்றும் பண்டாரவளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே, இந்த மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது.

“தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால், மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களிலுள்ள மக்கள், மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில், அப்பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆறுகள் பெருக்கெடுப்பு

தொடர்ந்து பெய்துவதும் மழை காரணமாக, நில்வளா கங்கை, கெசெல்கமுஓயா, களு கங்கை, கிங் கங்கை மற்றும் குக்​குலேகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அக்கங்கைகளை அண்மித்து வாழ்ந்துவரும் மக்கள், மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நில்வளா கங்கையானது, மாத்தறை - பானந்துகம பிரதேசத்தின் ஊடாக பெருக்கெடுத்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள், பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கெசெல்கமுஓயா, ஹட்டன் பிரதேசத்தில் பெருக்கெடுத்துள்ளதால், நோர்வூட் மற்றும் பொகவந்தலாவை போன்ற பள்ளத்தாக்குப் பிரதேசங்களில் பல, நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், குக்குலேகங்கையின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளதால், பதுரளிய, மில்லனிய, இங்கிரிய போன்ற பள்ளத்தாக்குப் பிரதேசங்களில் வாழ்ந்துவரும் மக்கள், அவதானத்துடன் இருக்கவேண்டும் என, மத்திய நிலையம் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .