2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'மாற்றம் வரும்'

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருத்து மோதல்கள் மற்றும் சூடான வாதப்பிரதிவாதங்களால், கீரியும் பாம்புமாக இருந்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை, ​சிங்கப்பூரில், நேற்று (12) இடம்பெற்றது.   

உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்த இந்தப் பேச்சுவார்த்தை, சிங்கப்பூரின் செந்தோசா தீவிலுள்ள நட்சத்திர விடுதியில், நேற்றுக்காலை ஆரம்பமாகி, பிற்பகலில் நிறைவடைந்தது. நேற்றைய நாளை, “டிரம்ப் - கிம் நாள்” என, சமூக வலைத்தளங்கள் பதிவிட்டிருந்தன.   

பதவியிலிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், வடகொரிய தலைவரைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும் என்பதால், பலத்த பாதுகாப்பு நிறைந்ததாகவும் உலகத்தின் கண்கள் முழுவதும் சிங்கப்பூரை நோக்கியதாகவும் அமைந்திருந்தன, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஷங்கரிலா ஹொட்டலிலும் வடகொரியத் தலைவர், செயின்ட் ரெஜிஸ் ஹொட்டலிலும் தங்கியிருந்தனர்.   

இரு நாடுகளின் தலைவர்களும், ஒரே நேரத்தில் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம்மை நோக்கி, கையை நீட்டினார். அதனையடுத்து, இரு நாடுகளின் தலைவர்களும், நேற்றுக்காலை 9 மணிக்கு கை குலுக்கிக்கொண்டனர். சுமார் 10 விநாடிகள் கை குலுக்கிகொண்டதன் பின்னர், இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளுக்கு முன்பாக நின்று, வரலாற்று முக்கியத்துவமிக்க புகைப்படத்தை எடுத்துக்கொண்டனர்.   

“நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் ப்ரெசிடன்” என கிம் தெரிவிக்க, தனது வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டி புன்முறுவல் செய்தார் ட்ரம்ப்.   

தொடர்ந்து ட்ரம்ப் கூறுகையில், “மிகவும் மகிழ்ச்சியான தருணம். நல்ல ஒரு விவாதத்தை மேற்கொள்ள உள்ளோம். அதில் வெற்றி பெறுவோம். இரு நாடுகள் இடையே மிகச்சிறப்பான உறவு மலரப்போகிறது. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்றார்   

இதன்போது கிம் கூறுகையில், “இங்கு வந்துள்ளது எளிதான விடயமல்ல. பல தடைகளைத் தாண்டி சந்திப்பு நிகழ்ந்துள்ளது” என்றார்.   

தனிப்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, தமது குழுவினருடன் இணைந்து, இன்னுமொரு சந்திப்பையும் அவர்கள் மேற்கொண்டனர். அதன் பின்னர், மதிய உணவுடனான சந்திப்பு அமைந்தது.   

குறுகிய பேச்சுவார்த்தை, சுமார் 40 நிமிடங்கள் இடம்பெற்றன. அதன் பின்னர், மொழிபெயர்பாளர்களின் உதவியுடன் நீண்டநேரப் பேச்சுவார்த்தைக்காக இரு தலைவர்களும் மீண்டும் கூடினர். அப்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள், இந்தச் சந்திப்பு பற்றிக் கேள்வியெழுப்பினர்.   

அப்போது பதிலளித்த ட்ரம்ப், “மிகச் சிறப்பு, மிகச் சிறப்பு. அருமையான உறவு” என்று பதிலளித்தார். நிரூபர்கள் கேள்விக்குப் பதில் சொல்வதை, புன்முறுவலுடன் கிம் தவிர்த்தார்.   

வடகொரியாவின் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டதா என, மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த டிரம்ப், “ஒப்பீட்டளவில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டது” என்றார்.   

ஆவணத்தில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத்தெரிவித்த வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், “கடந்த காலத்தைக் கைவிட்டுவிட நாங்கள் முடிவெடுத்துள்ளோம். மிகப்பெரிய மாற்றமொன்றை உலகம் காணும்” என்று தெரிவித்ததோடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எனவும் இச்சந்திப்பு இடம்பெற வழிவகுத்த ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.   

“நான் தடைகளை நீக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்று கூறிய டிரம்ப் ‘’அணு ஆயுத நீக்கம் குறித்து, வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு, இந்தத் தடைகள் தொடரும்’’ என்று குறிப்பிட்டார்.   

வடகொரியாவில் மிச்சமுள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள் என்று கிம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், டிரம்ப் இதன்போது கூறியுள்ளார்.   

வட கொரியாவுக்குக் கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, தங்களின் இராணுவத் திறன்களை குறைக்கப்போவதில்லை என்றுக் கூறிய டிரம்ப், “ஆனால், தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும்” என்றார்.   

“கிம் ஒரு புத்திசாலி” “கிம், நல்ல புத்திசாலியானவர்” என்று தெரித்த டிரம்ப். “சிறு வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்” என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, முக்கியமான அணு ஆயுதச் சோதனைத் தளத்தை ஏற்கெனவே அழிப்பதற்கு, கிம் தொடங்கியதாக டிரம்ப் குறிப்பிட்டார்.   

“அணு ஆயுதங்களைக் கைவிட்டால், வட கொரியா பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என்று குறிப்பிட்ட அவர், “மற்ற நாடுகள் வட கொரியாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும்” என்றார்.   

கிம்மை புகழ்ந்த டிரம்ப்

உண்மையான மாற்றம் சாத்தியமே. வட கொரிய தலைவர் கிம் உடனான சந்திப்பு நேர்மையாகவும் நேரடியாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாக, பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார்.   

“கடந்த 24 மணிநேரம், பிரம்மாண்டமாக இருந்தது. சொல்லப் போனால், கடந்த 3 மாதங்களுமே அப்படித்தான் இருந்தது” என்றுத் தெரிவித்துள்ள டிரம்ப், “அற்புதமான இடமாக இருக்க வட கொரிய நாட்டுக்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.   

இதேவேளை, உலகத் தலைவர்களைச் சந்திக்கும்போது எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிடக் குறைவான நேரத்தையே, கிம்முடன் கைகுலுக்கும்போது டிரம்ப் எடுத்துக்கொண்டாரென, செய்திகள் வெளியாகியுள்ளன.   

அரசியல் ரொக்ஸ்டார் கிம்?

சிங்கப்பூரில் கிம் வரவேற்கப்பட்டதை ஆராய்ந்த ஜென்னி டவுன், “ஆறு மாதங்களுக்கு முன் உலகில் வெறுக்கப்பட்ட தலைவர் கிம் என்று இருந்தது. ஆனால் தற்போது, அவர் பெரிய நட்சத்திரம் போல நடத்தப்படுகிறார்” என்று குறிப்பிட்டார்.   

அஞ்சினாரா கிம்?

கிம் ஜோங் - உன் பதவி ஏற்றதிலிருந்து, முதல் ஆறு ஆண்டுகளுக்கு வெளிநாடுகள் எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. தான் வட கொரியாவில் இல்லாவிட்டால் அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நேரிடுமென்று அவர் அஞ்சினார் என்று கருதப்பட்டது.   

ஆனால் இந்த ஆண்டு, முதலாவதாக சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார், பின் தென் கொரியாவுக்கும் அதன் பின் சிங்கப்பூருக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவுக்கும் கிம் பயணம் மேற்கொள்ளலாமென்று அறியமுடிகின்றது.   

‘கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன்’

வெள்ளை மாளிகைக்கு கிம்மை அழைப்பீர்களா என்று ஜனாதிபதி டிரம்பிடம் கேட்டதற்கு, ‘நிச்சயமாக அழைப்பேன்’ என்று அவர் கூறினார்.   

மாணவர் ஓட்டோ குறித்து பேசப்படவில்லை

2016ஆம் ஆண்டு, அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர், வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். அங்கு சிறைபிடிக்கப்பட்ட வார்ம்பியர், 2017ஆம் ஆண்டு கோமா நிலையில் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, டிரம்போ கிம்மோ ஏதும் பேசவில்லை.   

பேனாவில் டிரம்பின் கையெழுத்து?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட, டிரம்ப்-கிம் வரவிருக்கும் மேசையில், டிரம்ப் கையெழுத்திடப் போகும் பேனா வைக்கப்பட்டிருந்தது.   

வசைமொழி பொழிந்தனர்

‘கிம்மின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை மூன்று மாதங்களுக்கு முன்பே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் வெறும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கிம்மை ‘குட்டி ரொக்கெட் மனிதர்’ என, டிரம்ப் அழைத்ததும் டிரம்பை `பலவீனமான முதியவர்` என கிம் அழைத்ததும் நடந்தது.   

‘’தற்போது அவர்கள் ஓர் உறவை உருவாக்கி சமாதானம் பேசுகிறார்கள். நிச்சயம் பெரும் தடைகளைக் கடக்க வேண்டி இருக்கும்.’’   

கைக்குலுக்கலில் டிரம்புக்கு ஏமாற்றம்?

இதுவரை மூன்று முறை டிரம்பும் கிம்மும் கைக்குலுக்கிக் கொண்டுள்ளனர். மூன்று முறையும் அதிபர் டிரம்ப்தான் முதலில் கையை நீட்டினார். உடல்மொழி நிபுணரான மனோஜ் வாசுதேவன், தனது ஆதிக்கத்தை உறுதிபடுத்தும் விதமாக டிரம்ப் இவ்வாறு செய்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.   

ஆனால், டிரம்ப் எதிர்பார்த்த கைக்குலுக்கலை அவர் பெறவில்லை என்று குறிப்பிட்ட மனோஜ், அமெரிக்க கலாசாரத்தில், நீண்ட நேரம் கைக்குலுக்கும் முறை பின்பற்றப்படும் என்றும் டிரம்புக்கு அது கிடைக்கவில்லை என்றும் கூறினார்.   

முக்கிய பங்கு வகிக்கும் பெண்

இன்று காலை பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து, பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் பெண்ணொருவர் இருந்தார். யார் இவர்? என்ற கேள்வி அங்கு குழுமியிருந்த அனைவரிடமும் இருந்தது.   

அவர் வெறும் வார்த்தைகளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல, அனைத்துப் பொருட்களையும் புரிந்து விளக்குபவர். அவர் தான் பேச்சுவர்த்தை நடக்கும் அறையில் முக்கிய நபர் என்று தெரியவருகிறது.   

வட கொரியா பேராளர்கள்

கிம் யோங் - சொல்: இவர், கிம் ஜோங் - உன்னின் வலது கை என்று கூறப்படுகிறது.   
ரி யோங் - ஹொ: வட கொரியா வெளியுறவுத்துறை அமைச்சர். இவர் முன்னதாகவே 1990இல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்.   

ரி சு - யோங்: இவர், வெளியுறவு துறை முன்னாள் அமைச்சர். ஆனால், இப்போதும் வட கொரியாவின் சக்திமிகுந்த தலைவராக இருக்கிறார்.   

ட்ரம்புடன் இருந்தது யார்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒரு பக்கத்தில் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மைக் போம்பியோவும் இன்னொரு பக்கம் வெள்ளை மாளிகைப் பணியாளர்களின் தலைவர் ஜோன் எஃப். கெல்லியும் அமர்ந்திருந்தனர். பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனும் இருந்தார்.   

இச்சந்திப்பில், பாரிய மாற்றங்களோ அல்லது முடிவுகளோ எட்டப்படவில்லை என்றாலும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரியத் தலைவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, முக்கியமானதாகக் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.   

வடகொரியத் தலைவர், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னரே, இரு விமானங்கள் சிங்கப்பூர் வந்தன. உணவுப் பொருட்கள், உடைகள், குடிநீர், குண்டு துளைக்காத கார்கள் என்பன, தனிக்கப்பலில் சிங்கப்பூர் வந்து இறங்கின. வடகொரியத் தலைவரின் பயன்பாட்டுக்காக, ரெடிமெட் கழிப்பறையும் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது.

சிங்கப்பூரில், கிம்-ஜொங் தங்கியிருந்த நாட்களில், இந்தக் கழிப்பறையை அவர் பயன்படுத்தியுள்ளார். சிறுநீர், மலம் போன்றவற்றிலிருந்து எதிரிகள் தன் உடலில் உள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ள முடியும். இதுபோன்ற விடயங்களைத் தவிர்ப்பதற்காகவே, அந்த கழிப்பறையுடன் அவர் வந்தாரெனச் செய்தி வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .