2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முழங்கால் விவகாரத்தால் பதுளை சூடானது

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, அச்சுறுத்தி முழங்காலிடவைத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில் முழங்காலிட்டு, வணங்கி மன்னிப்பு கேட்ட விவகாரத்தை அந்த அதிபர் மூடிமறைத்தார். எனினும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்துக்கு, கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுடன் சென்ற வடிவேல் சுரேஷ்,

“இந்த விவகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத்தருவேன்” என முதலில் உறுதியளித்துள்ளார்.

“ஆகையால், எவ்விதமான அச்சமும் பயமும் இன்றி, அங்கு நடந்ததை ஊடகங்களுக்குத் தெரிவிக்குமாறு” அதிபர் பவானியிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் சூழ்ந்திருக்க, ஊடகங்களின் முன்பாக வந்த அதிபர், கண்ணீர் மல்க, தனக்கு நேர்ந்ததை, புட்டுப்புட்டு வைத்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தேசிய ரீதியில் பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்தது.

தனக்கு நேர்ந்ததை ஊடகங்களுக்கு அதிபர் தெரிவித்ததை அடுத்து அதிபர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மலையக தமிழ் கலாசாரத்துக்கு, ஊவா மாகாண முதலமைச்சர் பங்கம் விளைவித்துவிட்டார் என்பதால், மக்கள் முன்னிலையில், அவரும் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டுமென்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
‘உயிருக்கு அஞ்சி முழங்காலிட்டேன்’

சுற்றறிக்கையில் பிரகாரமே, 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவிகளை சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையை பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு 8 சதவீதமே ஒதுக்கப்படும். அதனடிப்படையியேயே, மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

எனினும், இன்னுமிரு மாணவிகளை சேர்த்துக்கொள்ளவேண்டுமென, முதலமைச்சர் சாமர சம்பத், கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அவ்வாறு கடிதங்களுடன் வந்திருந்த இருவரையும், அழைத்து, சுற்றறிக்கையை தெளிவுப்படுத்தினேன்.

இயலாத பட்சத்தில், மாகாண பணிப்பாளர் அல்லது மாகாண செயலாளரிடம் கடிதங்களை பெற்றுவருமாறு அவ்விருவரையும் அனுப்பிவைத்தேன். இதேபோன்றதொரு பிரச்சினை, 2017 ஆம் ஆண்டின் போதும், தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது இடம்பெற்றது.

இந்நிலையில், ஜனவரி 3 ஆம் திகதியன்று தன்னுடைய காரியாலயத்துக்கு வருமாறு மாகாண செயலாளர் என்னை அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். சிறிதுநேரம் கழித்து, முதலமைச்சரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தங்களுடைய பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளுமாறு, முதலமைச்சரின் கடிதங்களுடன், பாடசாலைக்கு வந்திருந்த பெற்றோர் இருவரும் இருந்தனர். மாகாண கல்விப் பணிப்பாளரும் இருந்தார்.

கடுமையான கோபம் கொண்டிருந்த முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க,

“நான் 8ஆவது படிக்காதவன் என்று தெரிவித்தீரா, உனக்கு இங்கு வேலையில்லை. ஏதாவது தூர பிரதேசமொன்றுக்கு இடமாற்றவும்” என, மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண செயலாளருக்கு  கடுமையான கட்டளையிட்டார்.

அத்துடன், அவ்விரு பெற்றோர்கள் முன்னிலையிலும் முழங்காலிட்டு, மன்னிப்புக் கேட்குமாறு கேட்டார்.

“என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தேன். என்ன செய்வதென்று தெரியாத நான், இறுதியில் முழங்காலிட்டேன். மன்னிப்பு கேட்டேன். என் வாழ்க்கையில் எப்போதும் பொய் சொல்லியது இல்லை. மாணவிகளை சேர்க்கும் விவகாரத்தில் இன, மத, மொழி உள்ளிட்ட வேறுபாடுகளை பார்க்கமாட்டேன். சுற்றறிக்கையின் பிரகாரமே செயற்படுவேன். கடந்த காலங்களில் செயற்பட்டும் உள்ளேன். ஆளுநர் எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என்றேன்.

எனினும், என்னுடைய விளக்கங்களுக்கு செவிசாய்ப்பதாக, முதலமைச்சர் அன்றிருக்கவில்லை. தொழில் பயம், அச்சம் உள்ளிட்டவை காரணமாகவே, முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டேன். அதனைவிட, என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. எனினும், அவ்விடத்தில் மாகாண கல்விப் பணிப்பாளரும், மாகாண செயலாளரும் இருந்தனர். அங்கு நடந்தவை என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

முதலமைச்சர் காரியாலயத்தில் நான் முகம்கொடுத்த சம்பவம் தொடர்பில், பாடசாலையின் லொக் புத்தகத்தில் அப்படியே பதிவிட்டுள்ளேன்.

“நான், அச்சுறுத்தப்பட்டதனால், அங்கு நடந்த சம்பவத்தை முற்றாக மாற்றியே ஊடகங்களுக்கு அன்று தெரிவித்தேன். அன்று நடந்த சம்பவம் எனது மனநிலையை வெகுவாகப் பாதித்துவிட்டது. எனக்கும், எனது பாடசாலைக்கும் களங்கம் ஏற்பட்டதை எண்ணி மனதுக்குள்ளேயே  குமுறிக்கொண்டிருக்கின்றேன். எனது நிலை குறித்து மக்கள் பிரதிநிதிகள் எவருமே, எனக்கு ஆறுதல் கூற முன்வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மட்டுமே , வித்தியாலயத்துக்கு வந்து சம்பவத்தைப் பற்றி வினவினார்” என்றார்.

“எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

‘பகிரங்கமாக முழங்காலிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்’

இந்த விவகாரம் தொடர்பில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கையில்,

“இது ஓர் அதிபருக்கு இடம்பெற்ற சம்பவமாகக் கருதமுடியாது. நான் கருதவும் மாட்டேன். முழு சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகும். பாடசாலை அதிபர் ஒருவரை முழங்காலிடவைப்பதற்கு அரசியல்வாதிக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை.

“பாடசாலைக்கு தேவையான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை, நல்கவேண்டியதே அரசியல்வாதிகளின் கடப்பாடாகும். எனினும், முதலமைச்சரின் செயற்பாடு, முழு சமூகத்தையும் கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

“இந்த விவகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அதனடிப்படையிலேயே, கல்வியமைச்சு பதவியை அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.

“மாகாண முதலமைச்சருக்கும், எனக்குமிடையே தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை சமூகம் என்ற ரீதியில், நான் சமூகத்துடன் இருக்க வேண்டும். இன்று வித்தியாலய அதிபர் பவானிக்கு நடக்கலாம். நாளை எமது சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கும் நடக்கலாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

“தனக்கு ஏற்பட்ட அநீதிகளை அதிபர் அடக்கிவைத்துக் கொண்டிருந்துள்ளார். நான் வித்தியாலயத்துக்குச் சென்று அவரிடம் வினவியதும், என்மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையின் பயனாக அனைத்து விடயங்களையும், கண்ணீர் மல்கக் கூறினார்.

இதையடுத்து அதிபருக்கு அச்சுறுத்தல் ஏதும் இடம்பெறும் என்பதால், அவருக்கு, பாதுகாப்பை  வழங்கவும் ஏற்பாடு செய்தேன்” என்றார்.

“இந்தப் பாடசாலையில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மாணவிகளே கூடுதலாக கல்விப்பயிலுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்” என்றார்.

“பாடசாலை அதிபர் ஒருவரையே முழங்காலிட வைத்த முதலமைச்சர், பாடசாலைகளின் ஆசிரியைகள், ஆசிரியர்கள் ஏன் மாணவிகளை எதுவேண்டுமானாலும் செய்யக்கூடும். ஆகையால் இந்த விவகாரத்துக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து, பாடசாலைகள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்” என்றார்.

முதலமைச்சர் சாமர சம்பத் விளக்கம்

மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (21) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க,

“என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுப்பதற்கு நான் தயார். அதற்காக, என்மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் கல்விமைச்சை இராஜினாமா செய்கின்றேன்” என்றார்.

“மாகாண கல்வி அமைச்சராகிய எனது பெயருக்கு களங்கத்தை  ஏற்படுத்தியமை தொடர்பில், பதுளை பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் மா அதிபரிடமும் முறையிட்டுள்ளேன்.  முறைப்பாடுகளையும், புகார்களையும்,  பக்கச் சார்பின்றி விசாரணை செய்வதற்கு வசதியாகவே இந்த அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்கின்றேன்” என்றார்.

“பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய சம்பவம், எனது பெயருக்கும், எனது அரசியல் பயணத்துக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், ரூபாய் 500 மில்லியன் கேட்டு, மானநட்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.  

என்னுடைய இராஜினாமா  கடிதங்களை, ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் அனுப்பியுள்ளேன். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கின்றேன்.

“மத்திய வங்கியில் ஏற்பட்ட மோசடியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளது. பிரதமர் பதவியில் அவர், தொடர்ந்தும் இருக்கமுடியாது. பிரதமர் பதவியை அவர் முதலில் துறக்கவேண்டும். அவ்வாறு பதவியை அவர் துறந்தார் என்றால், மறுநிமிடமே, ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை நான் இராஜினாமா செய்வேன்” என்றார்.

நாளை விசாரணை

இந்நிலையில், பதுளை பொலிஸ் நிலையத்தில் குழுமியிருந்த தன்னுடைய ஆதரவாளர்களின் மத்தியில் பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,  “பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் முழங்காலிட வைத்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கல்வியமைச்சை மட்டும் இராஜினாமா செய்தமையானது,  ஒரு கண்துடைப்பு விடயமாகும். இந்த விவகாரத்துக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது செயற்பாடுகள் தொடரும்” என்றார்.

இதேவேளை, இந்த விவகாரம் குறித்து, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர  சம்பத் தஸநாயக்கவை விசாரணைக்குட்படுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்று, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்” என்றார்.

அதிபரும் முறைப்பாடு

விவகாரம் பகிரங்கமாகி சூடுபிடித்ததையடுத்து, அந்த வித்தியாலயத்தின் அதிபர், ஆர்.பவானி, பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு செய்துள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
‘வழக்குத் தாக்கல் செய்வேன்’

இவ் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த,  இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட அதிபர் சார்பாக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் காரியாலயத்தில் ஜனவரி 03 ஆம் திகதியன்று மண்டியிட வைத்த சம்பவமானது, ஒளிப்பதிவு செய்யப்பட்டு, ஊவா மாகாண சபையின், ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்தியாரத்னவின் ஊடாகவே அம்பலப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தனக்கு நேர்ந்ததை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திடம் (கபே) அதிபர் ஆர்.பவானி முறையிட்டுள்ளார்.

முழங்காலிடவைத்த விவகாரம் கடந்த 11 ஆம் திகதியன்று, அன்றைய ஊவா மாகாண சபையமர்வின் போது, எம்.சச்சிதானந்தன், சமந்த வித்தியாரட்ன ஆகியோர், முழங்காலிடவைத்த விவகாரம் தொடர்பில், முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனால், பெரும் அமளி, துமளி ஏற்பட்டதுடன் சபையமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

ஊவா மாகாண சபையை பொறுத்தவரையில், தமிழ் அமைச்சர் ஒருவர் உட்பட ஐந்து உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களுமாக எழுவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றனர். அப்படியிருந்தும் எவருமே கடந்த 10 தினங்களாக வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிரடியாக முடிவெடுத்தார் ஜனாதிபதி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பாடசாலை அதிபர் ஒருவரை முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பணித்துள்ளார்.

இந்த விசாரணையை பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊவா மாகாண ஆளுநருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதுளையில் பெரும் பதற்றம்

இந்நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காக, நேற்றுப் பிற்பகல் பதுளை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, சம்பவம் இடம்பெற்ற இடத்தை சோதனைக்கு உட்படுத்துவதாகக் கூறி, ஊவா மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர், அந்த அதிபர் மனநலநோயால் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, பதுளை பெரியாஸ்பத்திரியின் மனநல வைத்தியரிடம் காண்பிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள், அதிபர் எவ்வாறான மனநலநோய்களாலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே, பற்றமான நிலைமை சற்று தணிந்தது.

இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சரின் இந்தச் செயற்பாடு, குற்றவியல் குற்றமாகுமென கபே அமைப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .