2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூல வரைவிலேயே ‘மூவரின் தவறு“

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூவரும் இணைந்து ஜனாதிபதியை நீக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளனர். அந்த மூவரின் சூழ்ச்சி, மூல வரைவிலேயே அம்பலமாகிவிட்டதென, ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றஞ்சாட்டியதோடு, ஜனாதிபதியை விரட்டியடிக்கும் யோசனை உள்ளடங்கிய அரசமைப்பு யோச​னையில், போலியான கையொப்பமும் இடப்பட்டுள்ளதென்று  தெரிவித்தது.

புதிய அரசமைப்புக்கான மூல வரைவிலுள்ள யோசனைகளில் ஒன்றாக, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் இணைந்து, ஜனாதிபதியை நீக்கலாமென்ற யோசனையொன்றை உள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் சுட்டிக்காட்டியதை அடுத்து, சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (19) காலை 10.30க்குக் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தயாசிறி ஜயசேகர, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, ​புதிய அரசமைப்பு தொடர்பான மூல வரைவு தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இதனையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பில், ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர். இதனால், சபையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கு முடியாத நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது. அதனை குழப்பியடிக்கும் முயற்சிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முன்னதாக எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தயாசிறி ஜயசேகர, வழிப்படுத்தல் குழுவில் 10 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றும் அதில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே, புதிய அரசமைப்புக்கான மூல வரைவில் கையொப்பமிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். “நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன, சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ ஆகிய மூவர் மட்டுமே, இந்த வரைவில் கையொப்பமிட்டுள்ளனர். அவ்வாறு கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையில், பிரதமர், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூவரும் இணைந்து, ஜனாதிபதியை நீக்க முடியுமென்ற யோசனை பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

“சகல கட்சிகளும் இணைந்தே, புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும். அதனைவிடுத்து, மூவரின் தேவையை நிறைவேற்றுவதற்குத் தான் தயாரில்லை” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அவ்வணியைச் சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே, மூல வரைவில் கையொப்பமிட்டுள்ள சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, ஆறு மாதகாலமாக நாட்டிலேயே (இலங்கையில்) இல்லை என்றும் அவ்வாறானவொருவரின் கையொப்பம், மூல வரைவில் எவ்வாறு இடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“சபாநாயகர் அவர்களே! இது சிறிய விடயமல்ல. போலியாகவே கையொப்பமிடப்பட்டுள்ளது. எல்லா விடயங்களைப் போலவே, இந்த விடயத்தைச் சின்ன விடயமாகக் கருத வேண்டாம். தயவுசெய்து, கவனத்திற்கொள்ளவும்” எனக் கேட்டுக்கொண்டார்.

குறுக்கிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, “நானின்று உங்களைக் கடுமையாகக் குழப்பவில்லை. எனினும். இது இந்த நாட்டின் பிரச்சினையாகும். நாட்டில் இல்லாத ஒருவர், எப்படி கையொப்பமிட முடியும். நாடாளுமன்றத்தையும் பைத்தியக்காரக் கூடமாக்குவதற்கு முயலவேண்டாம். ஆலோசகர்கள் இந்த விவகாரத்தை நிராகரிக்க இல்லையாயின், அது இந்தளவுக்குப் பிரச்சினையாகி இருக்காது” என்றார்.

“பைத்தியகார கூடம்” என்ற  குற்றச்சாட்டை மறுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “கௌரவத்துக்குரிய நாடாளுமன்றம்” என விளித்துக் கூறியதுடன், “அந்தக் கௌரவம் பாதிக்கப்படவில்லை. தயவுசெய்து, நாடாளுமன்றத்தின் பெயரை, நகைச்சுவையாக்கிக் (ஜோக்) கொள்ளவேண்டாம்” என்றார்.

இதனிடையே குறுக்கிட்ட அவ்வணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மூல வரைவுக்கான இந்த யோசனை தொடர்பில், அமைதியாக இருக்கமுடியாது என்றும் மேலே குறிப்பிட்ட மூவரான நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன, சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் மட்டுமே கையொப்பட்மிட்டுள்ளனர் என்றும், அதிலும் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவின் கையொப்பம் போலியானதெனத் தெரிவிக்கப்படுவதாகவும் கூறினார்.

பிரதமருக்கும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுக்கும் என்ன நடக்கின்றதென்றே தெரியாது. அதுதான் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரிவித்த அவர், “நீங்கள் சபாநாயகர், அந்தப் பக்கமாக பார்த்து முடிவுகளை அறிவிப்பீர்கள். நாட்டின் ஆட்சியை பெடரலுக்கு மாற்றுவதற்கான சூழ்ச்சி, இதிலிருந்து அம்பலமானது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .