2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மைத்திரியை வீழ்த்துவோம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக, அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வீழ்த்தியமை போன்று, ஜனாதிபதி சிறிசேனவையும் வீழ்த்துவோம் என எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கட்சியின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு, நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பான தனது நிலைப்பாட்டை, ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரினார்.

“இன்னொரு ஜனாதிபதித் தேர்தல் இருக்காது என, ஜனாதிபதி சிறேசன தெரிவித்தார். வண. சோபித தேரரின் இறுதிக் கிரியையின் போது, அவர் அதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாகவும் இருக்கலாம், ஜனாதிபதி சிறிசேன, இன்னொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமையைக் கொண்டிருக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, அவர் கடைப்பிடிக்க வேண்டும்” என்று, விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பிலான 9 திருத்தங்களை, ஜே.வி.பி வழங்கியுள்ளது என, அவர் தெரிவித்தார்.

“அரசமைப்பின் வரைவுச் சட்டமூலம், முரண்பாடான பார்வைகளை உள்ளடக்கி இருக்காது. அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களையே அது கொண்டிருக்கும்.

“மக்கள் விடுதலை முன்னணியாக நாம், இந்த நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் அனுமதிக்க மாட்டோம் என, மக்களுக்கு உறுதி வழங்குகிறோம்.

“இடைக்கால அறிக்கை தொடர்பில் வெவ்வேறு மக்கள், வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, அரசின் கட்டமைப்பு, பௌத்தத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமை, ஒற்றையாட்சி அரசு, ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஆகியன தொடர்பில், வெவ்வேறான கருத்துகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் தொடர்பாக, கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

“வங்குரோத்து நிலையில் காணப்படும் சில அரசியல் கட்சிகள், இடைக்கால அறிக்கை தொடர்பில், மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்த முனைகின்றன” எனத் தெரிவித்த அவர், இவ்வாறான குழுக்களை நம்பி ஏமாற வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .