2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வசீம் தாஜுதீன் கொலை; உண்மைக் குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு உத்தரவு

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையவர்களென, கொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் இருப்பதாயின், அவர்களைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமாரவினால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, நேற்று (29) உத்தரவிடப்பட்டது.

குறித்த விளையாட்டு வீரரின் படுகொலை தொடர்பான வழக்கு, ​நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையாகியிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, கொழும்பின் முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராகவே கொலைக் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் இவர்கள், தமக்கெதிரான சாட்சியங்களை மூடிமறைக்கவும் போலி ஆவணங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் உள்ளனரெனக் கூறினர்.

இதன்போது, மேற்படி சந்தேகநபர்கள், கொலைக்கான சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எவையேனும் உள்ளனவா என்று, நீதவான் கேட்டார். அத்துடன், தற்போதைக்கு கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்கள், இவர்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்குப் போதியதாக இல்லையென்றும், நீதவான் கூறினார்.

இதற்கு பதிலளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், இந்த விடயம் தொடர்பில், சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு அறிவிப்பதற்கு அவகாசம் வழங்குமாறு கூறினர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், இதுவரையில், 1,200 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 22 இலட்சம் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறிய புலனாய்வுத் திணைக்களத்தினர், இது, மிகவும் சிக்கலான விசாரணையென்றும் தெரிவித்தனர்.

அத்துடன், வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தின் போது, அவரைப் பின்தொடர்ந்துச் சென்ற வாகனம் மற்றும் நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில், சி.சி.டிவி பதிவுகளைக் கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அவர்கள் கூறினர்.

அதேபோன்று, அந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், கொலை இடம்பெற்ற இடத்தினூடாகப் பயணித்த நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில், செய்மதிப் படங்களின் உதவியோடு தகவல்களைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச நாசா நிறுவனத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாகவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள், மன்றில் கூறினர்.

அத்துடன், தாஜுதீனின் அலைபேசி அழைப்புகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையானது, 172 பக்கங்களைக் கொண்டி​ருப்பதாகவும் அதனால், இது நீண்டதோர் விசாரணையென்றும் அதன் காரணமாக, சந்தேகநபர்களைக் கைதுசெய்ய அதிக நாள்கள் தேவைப்படுமென்றும், புலனாய்வு அதிகாரிகள் கூறினர்.

இவ்விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததோடு, சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிரான கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கக்கூடிய சாட்சியங்கள் தொடர்பில் மன்றில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்தோடு, இந்த வழக்கானது, கொலைச் சம்பவமொன்று தொடர்பானதென்றும் அதனால், ​இந்தக் கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேகநபர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் தற்போது கைதாகியுள்ள சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களைத் திரட்ட முடியாவிட்டால், அவர்களுக்கு எதிராக, தனியான வழக்கொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை ​தொடர்ச்சியாக மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, பெப்ரவரி 28ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு, நீதவான் மேலும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .