2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வடக்கு மீதான தெற்கு அரசியல்வாதிகளின் ஆதிக்கம் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா, எம்.றொசாந்த்

வடக்கையும் கிழக்கையும், தமது ஆதிக்கத்துக்கு உட்படுத்த, தெற்கு அரசியல்வாதிகள் முயற்சித்தால், நல்லிணக்கம் சாத்தியமாகாதென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள், சம அந்தஸ்துடையவர்களாக வாழும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியுமென்றும் மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடின், இவ்விரு விடயங்களும் கைக்கூடாதென்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவினருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில், நேற்று (20) இடம்பெற்றது.

இலங்கையில், இனங்களுக்கிடையிலான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள் குறித்து ஆராய்வதற்காக வருகை தந்துள்ள அக்குழுவினருடனான கலந்துரையாடல் பற்றி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு, ஐரோப்பி ஒன்றியத் தூதுக் குழுவினரிடம் தான் தொடர்ந்துரையாற்றிய போது, தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியதாகக் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை, தங்களின் ஆதிக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்திலேயே தெற்கு அரசியல்வாதிகள் இருப்பதால், தம்மால் எதையும் செய்ய முடியாத நிலைமை தோன்றியிருப்பதாக, அவர்களிடம் எடுத்துரைத்ததாக, முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இவாறான நிலைமையில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாதென்றும் தமிழ் மக்கள், சம அந்தஸ்துடையவர்கள் என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே, மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படுமென்றும் எடுத்துக் கூறியதாகம் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பாக, அக்குழுவினர் ஆராய்ந்ததாகவும் வடக்கு மாகாணத்தில், இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பது மற்றும் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மகாவலித் திட்டம் போன்றன தொடர்பாகவும், மகாவலித் தண்ணீரை வடக்குக்கு வழங்காமல் தடுப்பது தொடர்பாகவும் எடுத்துரைத்ததாக, அவர் குறிப்பிட்டார்.

“அத்துடன், முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதன்போது, முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் முகாம்களில் வைத்திருந்த போது, பலரைத் தம்வசம் ஆக்கியுள்ளார்கள். இராணுவத்தினர் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள, முன்னாள் போராளிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் போராளிகளின் வாழ்க்கை நிலை உயர்ந்தாலும், அவர்கள், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன்.

“அதேநேரம், சமூகத்தில் முன்னாள் போராளிகள் தொடர்பான கரிசனை இருக்கின்றது. முன்னாள் போராளிகளுடன் இணைந்திருக்க, கிராம மக்கள் தவிர்ப்பதையும் எடுத்துக் கூறினேன். அவ்வாறு முன்னாள் போராளிகளைத் தனியாக இருக்கவிட முடியாது. அரசாங்கமும் வடமாகாண சபையும் இணைந்து, முன்னாள் போராளிகளுக்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவ்வாறான செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும் எடுத்துரைத்தேன்” என, முதலமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .