2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘வாக்குறுதி முக்கியம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிர்ஷன் இராமானுஜம் 

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிப்பதாக, தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வர்த்தமானியை வெளியிடுமாறு, அரசாங்கத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, கொழும்பில் அமைந்துள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், இதனை வலியுறுத்தினார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், நாளை (இன்று) வெளியிடப்படவிருந்தது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட 5 பிரதேச சபைகளின் எண்ணிக்கையை 12ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதி குறித்து, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கலந்துரையாடியுள்ளோம். எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர், தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரினோம். 

“இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியாகும். இங்கே, நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுமாறே வலியுறுத்தியிருக்கிறோம்.  

“அம்பேகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், 2 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நாட்டில் 25 ஆயிரம் பேர் வரையில் வரையறைக்குட்படுத்த வேண்டிய ஒரு பிரதேச சபையில், இலட்சக்கணக்கானோர் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். இதில் நிகழ்ந்துள்ள அசாதாரணத்தை நீக்கி, நியாயத்தை நிலைநாட்டுமாறே நாம் கோரியிருக்கிறோம். 

“இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் திங்கட்கிழமை (நேற்று), பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிய பின்னர், தேர்தல் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார். 

“அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் உட்பட, நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையிலான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (இன்று) இடம்பெறவுள்ளது. அதில் காத்திரமான, மக்களுக்குச் சாதகமான தீர்வுகள் எட்டப்படும் என நம்புகிறோம். 

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது கருத்தின் பிரகாரம், எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும். எமது கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் திகதியும் மாற்றமடையும். இதனால், தேர்தல் நடைபெறும் தினம், ஓரிரு நாட்கள் பின்தள்ளிப் போகக்கூடிய வாய்ப்புகள் உண்டு” என்று தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ மீது, பின்னர் விமர்சனங்களை முன்வைத்த அமைச்சர் மனோ, “அரசாங்கம், என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தித் தேர்தலை பிற்போடுகிறது என, மொட்டுக் கட்சியொன்றின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் பசில் ராஜபக்‌ஷ, குற்றஞ்சுமத்தியுள்ளார். அரசாங்கம் என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தவுமில்லை, என்னைப் பயன்படுத்தவும் முடியாது என்பதை, நான் அவருக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.  

“தேர்தல்கள் காலம் தள்ளிப் போவதற்கு, அவரும் ஒரு காரணமாவார். 2012ஆம் ஆண்டு அவர்கள், தமக்கு ஏற்றாற்போல எல்லை நிர்ணயம் செய்தார்கள். ஒரு வீட்டில், சமையலறை வேறாகவும், குளியலறைகள், படுக்கையறைகள் வேறாகவும் எல்லை நிர்ணயம் செய்தார்கள். அதன் விளைவுகளைத் தான், நாம் இப்போது அனுபவிக்கிறோம். 

“பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு, கொழும்பு மாநகர சபையிடமிருந்து 8 பில்லியன் ரூபாயை அவர் பெற்றுக்கொண்டார். கருணா அம்மானையும் மேர்வின் சில்வாவையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அவர் செய்த வேலைகளை நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலம் தள்ளிப் போகாது. பசில் குழப்படையத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். 

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மேல்மாகாண சபை உறுப்பினர் கே.ரி.குருசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .