2024 மார்ச் 28, வியாழக்கிழமை

10 இடங்கள் முன்னேறினார் ஜோக்கோவிச்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியனாகியமையத் தொடர்ந்து, நேற்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 11 இடங்கள் முன்னேறி சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விம்பிள்டனின் இறுதிப் போட்டியில், தற்போது ஐந்தாமிடத்திலுள்ள தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சனை, 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்றே தனது 13ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் பெற்றிருந்தார்.

விம்பிள்டன் ஆரம்பமாவதற்கு முன்னர் எட்டாமிடத்திலிருந்த கெவின் அன்டர்சன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியமையைத் தொடர்ந்தே மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில், தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் மாற்றமெதுவும் ஏற்படாத நிலையில், முதலிடத்தில் ஸ்பெய்னின் ரபேல் நடாலும் இரண்டாமிடத்தில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும் மூன்றாமிடத்தில் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வும் தொடருகின்றனர். நான்காமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போத்ரோ தொடருவதோடு ஆறாமிடத்தில் பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ் தொடருகின்றார்.

இதேவேளை, குரோஷியாவின் மரின் சிலிச் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் கீழிறங்கி ஏழாமிடத்தில் காணப்படுவதோடு, விம்பிள்டனில் அரையிறுதி வரை முன்னேறிய ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தில் காணப்படுகின்றார். ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம் இரண்டு இடங்கள் கீழிறங்கி ஒன்பதாமிடத்தில் காணப்படுகின்றார்.

பெண்களில், விம்பிள்டனில் சம்பியனான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 10ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தில் காணப்படுகின்றார். முதலாமிடத்திலும் இரண்டாமிடத்திலும் றோமானியாவின் சிமோனா ஹலெப்பும் டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கியும் தொடருகின்ற அதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ் ஒரு இடம் முன்னநகர்ந்து மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐந்தாம், ஆறாம் இடங்களில் உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, பிரான்ஸின் கரோலின் கர்சியா ஆகியோர் தொடருகின்ற அதேவேளை, மூன்றாமிடத்திலிருந்த ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸா, நான்கு இடங்கள் கீழிறங்கி ஏழாமிடத்திலுள்ளார்.

எட்டாம், ஒன்பதாம் இடங்களில் ஒவ்வொரு இடங்கள் கீழிறங்கியவாறு செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் காணப்படுகையில், விம்பிள்டன் அரையிறுதி வரை முன்னேறிய ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஜஸ் மூன்று இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.

இதுதவிர, விம்பிள்டன் இறுதிப் போட்டி வரை முன்னேறிய 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X