2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2 கோல் பின்தங்கியிருந்தை தாண்டி அரையிறுதியில் பார்சிலோனா

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தகுதிபெற்றுள்ளது.

செவில்லியா அணியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்த பார்சிலோனா, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று காலிறுதிப் போட்டியில் அம்முன்னிலையைத் தகர்த்த அபார வெற்றியின் மூலமே கோப்பா டெல் ரே தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 13ஆவது நிமிடத்தில், செவில்லியாவி அணியின் குயின்ஸி புரோமேஸின் தொடுகைக்குள்ளான பார்சிலோனாவின் நட்சத்திர முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி வீழ்ந்தார். இதனையடுத்து வழங்கப்பட்ட பெனால்டியை பிலிப் கோச்சினியோ கோலாக்க பார்சிலோனா முன்னிலை பெற்றது.

தொடர்ந்த போட்டியின் 26ஆவது நிமிடத்தில், பார்சிலோனாவின் பின்கள வீரர் ஜெராட் பிகேயால், செவில்லியா அணியின் மத்தியகள வீரர் றொக்கே மெஸா வீழ்த்தப்பட பெனால்டி வழங்கப்பட்டது. எனினும் எவர் பனீகாவின் இந்த பெனால்டியை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் ஜஸ்பர் சில்சன், இடது பக்கம் பாய்ந்து தடுத்திருந்தார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சக மத்தியகள வீரரான ஆர்தர் மெலோவிடமிருந்து பெற்ற பந்தை பார்சிலோனாவின் இன்னொரு மத்தியகள வீரரான இவான் றகிட்டிச் கோலாக்க, தமது முன்னிலையை பார்சிலோனா இரட்டிப்பாக்கிறது.

தொடர்ந்து, 53ஆவது நிமிடத்தில், சக முன்கள வீரர் லூயிஸ் சுவாரஸிடமிருந்து பெற்ற பந்தை பிலிப் கோச்சினியோ கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பார்சிலோனா, அடுத்த நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை சேர்ஜி றொபேர்ட்டோ கோலாக்க 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 67ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற குய்ல்ஹெர்மே அரானா, பார்சிலோனாவின் மொத்த கோல் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார். எனினும், சக இடது பின்கள வீரரான ஜோர்டி அல்பாவிடமிருந்து பெற்ற பந்தை 89ஆவது நிமிடத்தில் கோலாக்கியதோடு, மேலதிக நிமிடங்களில் மெஸ்ஸி கோலொன்றைப் பெற இச்சுற்று காலிறுதிப் போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையைப் பெற்ற பார்சிலோனா, 6-3 என்ற மொத்த கோல் கணக்கில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .