2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2ஆவது டெஸ்டிலும் அகர்வால், விஹாரிக்கு வாய்ப்பில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, ஹைதரபாத்தில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், இத்தொடருக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மாயங்க் அகர்வால், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ஹனும விஹாரி ஆகியோருக்கு இப்போட்டியிலாவது வாய்ப்புக் கிடைத்திருக்கவில்லை.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இவ்வாண்டு டிசெம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், குறித்த தொடருக்கான அணியில் தமது இடங்களை உறுதியாகக் கொண்டுள்ள அணித்தலைவர் விராத் கோலி, செட்டேஸ்வர் புஜாரா ஆகியோருக்கு குறித்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு அகர்வால், விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் முதலாவது டெஸ்டுக்கு அறிவித்த அதே 12 பேர் கொண்ட குழாமையே இப்போட்டிக்காகவும் நேற்று அறிவித்துள்ள நிலையிலேயே அவர்களுக்கான வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

அந்தவகையில், ஏறத்தாழ முதலாவது டெஸ்ட் இடம்பெற்ற ராஜ்கோட்டையொத்த ஆடுகளத்தைக் கொண்டிருக்கும் ஹைதரபாத்திலும் அதே இந்திய அணி விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகிறது.

அந்தவகையில், உப அணித்தலைவர் அஜின்கியா ரஹானே அவுஸ்திரேலியத் தொடருக்கு முன்பதாக இப்போட்டியில் ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.

மறுபக்கமாக, காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், தனது அம்மம்மா இறந்தமை காரணமாக நாடு திரும்பிய கேமார் றோச் ஆகியோர் குறித்த போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகையில் முதலாவது போட்டியை விட இப்போட்டியில் சிறிது பலம் கொண்டதாக மேற்கிந்தியத் தீவுகள் காணப்படும்.

இதேவேளை, முதலாவது டெஸ்டில் துடுப்பாட்ட வீரர் சுனில் அம்பிறிஸ் மோசமான முறையில் இரண்டு தடவைகள் ஆட்டமிழந்தபோதும் குழாமில் மேலதிக துடுப்பாட்ட வீரர் இல்லாமை காரணமாக மேலுமொரு வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .