2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

3ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பமாகின்றது

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி கேப் டெளணில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கின்றது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவும் வென்று தொடர் 1-1 என்று சமநிலையில் காணப்படுகின்ற நிலையில், இப்போட்டியிலும் அடுத்த போட்டியிலும் என்ன முடிவுகள் பெறப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் அந்தந்த இடங்களிலேயே தொடரவுள்ளன.

ஆயினும், இத்தொடரின் பெறுபேறுகளுக்கப்பால் களத்துக்கப்பால் முதலாவது டெஸ்டில் ஓய்வறைக்குச் செல்லும்போது அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோணரும் தென்னாபிரிக்காவின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக்கும் முரண்பட்டமை, தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கஜிஸோ றபாடா இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்த பின்னர் அவருடன் மோதியமையால் பிரிவு இரண்டு குற்றச்சாட்டுக்குள்ளாகி இரண்டு டெஸ்ட் போட்டித் தடையை பெற்று பின்னர் மேன்முறையீட்டில் பிரிவு ஒன்று குற்றமாக குறைக்கப்பட்டு தடையிலிருந்து தப்பியமை உள்ளிட்ட சம்பவங்களால் இத்தொடர் களத்தினுள்ளேயும் வெளியேயும் போர்க்களம் போலவே காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இரண்டு அணிகளினதும் வீரர்களின் நடத்தைகளும் மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் உற்று நோக்கி கவனிக்கப்படப் போகின்றன.

இச்சந்தர்ப்பத்தில், தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் பிரதானமாக ஏ.பி டி வில்லியர்ஸையே தங்கியுள்ள நிலையில் ஏனைய வீரர்களிடமிருந்தும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபக்கம் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்கும் சகலதுறை வீரர் மிற்சல் மார்ஷும் இரண்டாவது போட்டியைத் தொடர்ந்து உபாதையைக் கொண்டிருந்தபோதும் தற்போது தேறி விளையாடுவதற்குரிய உடற்றகுதியையடைந்து விட்டனர் எனக் கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: 1. டீன் எல்கர், 2. ஏய்டன் மர்க்ரம், 3. ஹஷிம் அம்லா, 4. ஏ.பி டி வில்லியர்ஸ் 5. பப் டு பிளெஸி (அணித்தலைவர்) 6. தெனியுஸ் டி ப்ரூன், 7. குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), 8. வேர்ணன் பிலாந்தர், 9. கேஷவ் மஹராஜ் 10. கஜிஸோ றபாடா, 11. லுங்கி என்கிடி.

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: 1. கமரோன் பான்குரோப்ட், 2. டேவிட் வோணர், 3. உஸ்மான் கவாஜா 4. ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்) 5. ஷோன் மார்ஷ், 6. மிற்சல் மார்ஷ், 7. டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), 8. பற் கமின்ஸ், 9. மிற்சல் ஸ்டார்க், 10. நேதன் லையன், 11. ஜொஷ் ஹேசில்வூட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .