2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

52ஆவது சுப்பர் போல்: வென்றது பிலடெல்பியா ஈகிள்ஸ்

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில், கடந்தாண்டுக்கான பருவகாலத்துக்கான போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி வென்றது.

தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியும் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு மினியோஸ்டா மினியோபோலிஸுள்ள ஐக்கிய அமெரிக்க பாங்க் அரங்கத்தில் மோதின.

சுப்பர் போலின் 52ஆவது பருவகாலமாக அமைந்த இப்போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் வலிந்த தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்ட நிலையில், சாதனைகள் தகர்க்கப்பட மிகவும் விறுவிறுப்பாக இப்போட்டி அமைந்தது.

இப்போட்டியின் முதலாவது காற்பகுதி முடிவில் 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி, இப்போட்டியின் அரைப்பகுதி முடிவிலும் 22-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், மூன்றாவது காற்பகுதியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி ஏழு புள்ளிகளைப் பெற நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றது. அந்தவகையில், மூன்றாவது காற்பகுதி முடிவிலும் 29-26 புள்ளிகள் கணக்கில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி முன்னிலை வகித்தபோதும் வித்தியாசம் மூன்றாகவே இருந்தது.

இச்சந்தர்ப்பத்தில், முக்கியமான நான்காவதும் இறுதியுமான காற்பகுதியில் 12 புள்ளிகளை பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி பெற நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி ஏழு புள்ளிகளையே பெற, 41-33 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில், முதற்தடவையாக சுப்பர் போலை பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி வென்றது.

அந்தவகையில், நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி அதிக சுப்பர் போல்களை வென்ற அணி என ஆறாவது தடவையாக சுப்பர் போலை வென்று சாதனையைச் சமப்படுத்தும் சந்தர்ப்பத்தை பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி இல்லாமற் செய்திருந்தது.

இந்நிலையில், பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த 29 வயதான நிக் பொலெஸ், இப்போட்டியின் மிகவும் பெறுமதியான வீரராகத் தெரிவாகியிருந்தார். இவர் 373 பரிமாற்ற அடிகளைப் பூர்த்தி செய்து மூன்று புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, மறுபக்கமாக நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியின் நட்சத்திர வீரரான, 40 வயதான டொம் பிராடி, 505 பரிமாற்ற அடிகளில் மூன்று புள்ளிகளைப் பெற்றிருந்தபோதும் தனது ஆறாவது சுப்பர் போல் வெற்றியைப் பெற்றிருக்க முடிந்திருக்கவில்லை. டொம் பிராடியால் இப்போட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட 505 பரிமாற்ற அடிகளே சுப்பர் போலொன்றில் பெறப்பட்ட அதிக பரிமாற்ற அடிகளாகும். இது தவிர, சாதனை ரீதியாக, எட்டாவது சுப்பர் போலில் இப்போட்டியுடன் டொம் பிராடி பங்கேற்றிருந்தார்.

இதுதவிர, இப்போட்டியில் இரண்டு அணிகளாலும் மொத்தமாகப் பூர்த்தி செய்யப்பட்ட 1,151 பரிமாற்ற அடிகள், தேசிய கால்பந்தாட்ட லீக்கின் எந்தவொரு போட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட அதிக பரிமாற்ற அடிகளாக அமைந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .