2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

53ஆவது சுப்பர் போல்: சம்பியனானது நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்மிடையே நடைபெறும் சுப்பர் போலில் கடந்தாண்டுக்கான பருவகாலத்தில் நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி சம்பியனானது.

ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜிய மாநிலத்தின் தலைநகரான அத்லாண்டாவில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த 53ஆவது சுப்பர் போலில் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான லொஸ் ஏஞ்சலஸ் றம்ஸ் அணியும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியும் மோதின.

இரண்டு அணிகளும் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், முதற் காற்பகுதியில் புள்ளிகளெவையும் பெறப்படவில்லை. இந்நிலையில், இரண்டாவது காற்பகுதியில் மூன்று புள்ளிகளைப் பெற்ற நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி முதற்பாதி முடிவில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்னர், மூன்றாவது காற்பகுதியில் மூன்று புள்ளிகளைப் பெற்ற லொஸ் ஏஞ்சலஸ் றம்ஸ் அணி அக்காற்பகுதி முடிவில் புள்ளிகளைச் சமப்படுத்தியபோதும் நான்காவது காற்பகுதியில் 10 புள்ளிகளைப் பெற்ற நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி 13-3 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில் சம்பியனானது.

அந்தவகையில், இம்முறையுடன் ஆறாவது தடவையாக சுப்பர் போலில் சம்பியனாகியுள்ள நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணி, அதிக தடவைகள் சுப்பர் போலில் சம்பியனாகியுள்ள அணி என்ற பட்டத்தை பிற்ஸ்பேர்க் ஸ்டீலர்ஸ் அணியுடன் தற்போது பகர்ந்துள்ளது.

இதுதவிர, ஏற்கெனவே சுப்பர் போலில் அதிக தடவைகள் பங்கேற்றவரான நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியின் 41 வயதான டொம் பிராடி, தனது ஒன்பதாவது முறையான இம்முறை சாதனை ரீதியாக தனது ஆறாவது தடவையாக சம்பியனாகியிருந்தார். அந்தவகையில், தற்போது அதிக தடவைகள் சுப்பர் போல் சம்பியனானவராக மாறியுள்ள டொம் பிராடி, முன்னர் அதை சார்ள்ஸ் ஹேலேயுடன் பகர்ந்து கொண்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .