2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

அஜக்ஸை வென்று இறுதிப் போட்டியில் டொட்டென்ஹாம்

Editorial   / 2019 மே 10 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதற்தடவையாக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸிடம் தோல்வியடைந்திருந்த டொட்டென்ஹாம், அஜக்ஸின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே, மூலையுதையொன்றை அஜக்ஸின் அணித்தலைவரும் பின்களவீரருமான மத்தயாஸ் டி லிஜிட் தலையால் முட்டிக் கோலாக்கியதோடு 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியது. இதைத் தொடர்ந்து போட்டியின் 35ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் டுஸன் டடிச் வழங்கிய பந்தைக் கோலாக்கிய அஜக்ஸின் மத்தியகளவீரர் ஹக்கீம் ஸியெச், தனதணிக்கு 3-0 என்ற முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், சக பின்களவீரர் டனி றோஸ், தனது நிலையில் இல்லாதிருந்த மத்தையாஸ் டி லிஜிட்டைத் தாண்டி வழங்கிய பந்தைப் பெற்றுக் கொண்ட டொட்டென்ஹாமின் மத்தியகளவீரரான டெலே அல்லியிடம் கொடுத்த பந்தை, அவர் அஜக்ஸின் பின்களத்தினூடாக சென்று சக முன்களவீரர் லூகாஸ் மோராவிடம் வழங்க, அவர் அதை போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கோலாக்க அஜக்ஸின் முன்னிலையை இரண்டாக டொட்டென்ஹாம் குறைத்தது.

இதற்கடுத்த நான்காவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய டொட்டென்ஹாமின் முன்களவீரரான ஃபெர்ணான்டோ லொரன்டே கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையை அஜக்ஸின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானா தடுத்தபோதும், அது லூகாஸ் மோராவிடம் கைப்பற்றப்பட்டு, அஜக்ஸின் பின்களவீரர்களூடாக அவர் பெற்ற கோல் காரணமாக அஜக்ஸின் முன்னிலை ஒன்றாகக் குறைந்தது.

இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடத்தில், ஃபெர்ணான்டோ லொரன்டே வழங்கிய பந்தை, அஜக்ஸின் பின்களவீரர்களூடாக லூகாஸ் மோராவிடம் டெலே அல்லி வழங்க அவர் அதைக் கோலாக்க, கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய டொட்டென்ஹாம், தமது மைதானத்தில் அஜக்ஸ் ஒரு கோலையே பெற்றிருந்த நிலையில், அஜக்ஸின் மைதானத்தில் தாம் மூன்று கோல்களைப் பெற்றதன் காரணமாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .