2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அத்லெட்டிகோவை வென்று முதலிடத்தில் பார்சிலோனா

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா முன்னேறியுள்ளது.

அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு பார்சிலோனா முன்னேறியுள்ளது.

இப்போட்டியின் 86ஆவது நிமிடத்தில், சக முன்களவீரர் லூயிஸ் சுவாரஸுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டுவந்து பார்சிலோனாவின் அணித்தலைவரும் நட்சத்திர முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி பெற்ற கோலாலேயே இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் குறித்த போட்டியில் பார்சிலோனா வென்றிருந்தது.

இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் கம்பங்களை பதம் பார்த்திருந்ததுடன், பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் இரண்டு அபாரமான தடுப்புக்களையும் மேற்கொண்டிருந்தார். முதலில் அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்களவீரர் மரியோ ஹெர்மோஸோவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை தனது உடம்பால் தடுத்திருந்த மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன், பின்னர் அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரர் அல்வரோ மொராட்டா தலையால் கோல் கம்பத்தை நோக்கி முட்டியதையும் தடுத்திருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற லெகனிஸுடனான போட்டியில், டியகோ கார்லோஸின் கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்றிருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் பார்சிலோனாவும், றியல் மட்ரிட்டும் தலா 31 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முதலாமிடத்தில் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .