2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவில் முதல் வெற்றியைப் பெறுமா இலங்கை?

Editorial   / 2019 ஜனவரி 23 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பிறிஸ்பேணில் இலங்கை நேரப்படி நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள பகல் – இரவு டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இதுவரையில், அவுஸ்திரேலியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, ஒரு போட்டியிலும் வெல்லாத நிலையில், அவுஸ்திரேலியாவில் தமது முதலாவது வெற்றியை இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமொன்றாக இது நோக்கப்படுகிறது.

இலங்கைக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த இந்தியா போன்று ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, இஷாந்த் ஷர்மா என அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சுவரிசையை இலங்கை கொண்டிருக்காவிட்டாலும் சுரங்க லக்மாலின் தலைமையில் லஹிரு குமார, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர எனக் காணப்படும் இளம் வேகப்பந்துவீச்சுக் குழாம், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் இல்லாத துடுப்பாட்டவரிசைக்கு சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமது முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸை காயத்தால் இழந்தமை இலங்கைக்கு பாரிய அடியாகவே காணப்படுகின்ற நிலையில், அணித்தலைவர் தினேஷ் சந்திமால், உப அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோரே அவரது வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இது தவிர, இளம் வீரர்கள் குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வாவுடன் றொஷேன் சில்வாவின் அண்மைய பெறுபேறுகள் இலங்கைக்கு நம்பிக்கையளிப்பதாய் உள்ளன.

மறுபக்கமாக, துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் அவுஸ்திரேலியா இப்போட்டியில், இலங்கைக்கெதிரான பயிற்சிப் போட்டியின் இரண்டு இனிங்ஸ்களிலும் சதங்களைப் பெற்ற கேர்டிஸ் பட்டர்சனுக்கு அறிமுகத்தை வழங்கியுள்ளதோடு, சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜோ பேர்ண்ஸையும் அணிக்கு மீள அழைத்துள்ளது. அந்தவகையில், உஸ்மான் கவாஜாவே தற்போதைய அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் முதுகெலும்பாகக் காணப்படுவதோடு, அவரோடு இணைந்து இளம் வீரர்கள் மர்னுஸ் லபுஷைன், ட்ரெவிஸ் ஹெட் ஆகியோரிடமிருந்தும் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பந்துவீச்சுப் பக்கம், ட்ரெவிஸ் ஹெட்டுடன் இத்தொடருக்காக உப அணித்தலைவராக அறிவிக்கப்பட்ட பற் கமின்ஸும் நேதன் லையனும் ஆபத்தானவர்களாகக் காணப்படுகின்றநிலையில், தனது அண்மையகால மோசமான பெறுபேறுகளை மிற்செல் ஸ்டார்க் திருத்திக் கொள்ள எதிர்பார்ப்பார். இதுதவிர, இப்போட்டியில் அறிமுகத்தை மேற்கொள்ளும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்ஸனும் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணி: 1. மார்க்கஸ் ஹரிஸ், 2. ஜோ பேர்ண்ஸ், 3, உஸ்மான் கவாஜா, 4. மர்னுஸ் லபுஷைன், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. கேர்ட்டிஸ் பட்டர்சன், 7. டிம் பெய்ன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), 8. பற் கமின்ஸ், 9. மிற்செல் ஸ்டார்க், 10. ஜஹை றிச்சர்ஸன், 11. நேதன் லையன்.

எதிர்பார்க்கப்படும் இலங்கையணி: 1. திமுத் கருணாரத்ன, 2. லஹிரு திரிமான்ன, 3. தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), 4. குசல் மென்டிஸ், 5. றொஷேன் சில்வா, 6. தனஞ்சய டி சில்வா, 7. நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), 8. டில்ருவான் பெரேரா, 9. சுரங்க லக்மால், 10. துஷ்மந்த சமீர, 11. லஹிரு குமார.

இந்நிலையில், இத்தொடருக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் ஆறாமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் முடிவெதுவும் தரவரிசையின் நிலையில் தாக்கம் செலுத்தாதென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .