2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் நாளை: சவாலை வழங்குமா இலங்கை?

Editorial   / 2019 ஜனவரி 31 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கன்பெராவில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

முதலாவது போட்டியில் மூன்று நாட்களுக்குள்ளேயே இனிங்ஸ் தோல்விக்குள்ளான நிலையில் இப்போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு சவால் விடுக்க வேண்டுமானால் இலங்கையின் துடுப்பாட்டம் மிகவும் மேம்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக, இளம் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல தவிர வேறெவரும் முதலாவது டெஸ்டில் பிரகாசிக்காத நிலையில், சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் உப அணித்தலைவர் திமுத் கருணாரத்னவும் தமது பொறுப்புணர்ந்து செயற்படுவதுடன், அண்மைக்கால நம்பிக்கை நட்சத்திரமான குசல் மென்டிஸும் ஓட்டங்களைப் பெறுமிடத்தே அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை சவாலை விடுக்கலாம்.

இதேவேளை, தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே நுவான் பிரதீப்பை காயம் காரணமாக இழந்திருந்த இலங்கை, முதலாவது டெஸ்டைத் தொடர்ந்து கணுக்கால் காயம், பின்தொடை தசைநார் உபாதை காரணமாக முறையே லஹிரு குமார, துஷ்மந்த சமீர ஆகியோரையும் இழந்து தவிக்கிறது.

அண்மைய காலங்களில், இலங்கையணி சார்பாக லஹிரு குமார சிறப்பாக செயற்பட்டதுடன், பயிற்சிப் போட்டியில் துஷ்மந்த சமீர சிறப்பாக செயற்பட்டிருந்த நிலையில், இவர்களின் இருவரின் இழப்பு இலங்கைக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், இவர்கள் இருவரையும் ஏற்கெனவே குழாமிலுள்ள கசுன் ராஜிதவும் நுவான் பிரதீப்புக்குப் பதிலாக குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்ட விஷ்வ பெர்ணான்டோவும் அணியில் பிரதியீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த இரண்டாவது டெஸ்டிலிருந்து இலங்கை அணியைத் தெரிவுசெய்யும் முறையிலும் விளையாட்டமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் பணிப்புரையின் கீழ் மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க பதவியேற்ற பின்னர் அணியைத் தேர்வு செய்வதில் அவரும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

எனினும், இந்த இரண்டாவது டெஸ்டிலிருந்து அணித்தலைவரும் அணி முகாமையாளரும் தேர்வுக் குழாமுடன் இணைந்தே அணியைத் தெரிவுசெய்யவுள்ளனர்.

மறுபக்கமாக, இந்தியாவுடனான தோல்வியைத் தொடர்ந்து முதலாவது டெஸ்டில் பெற்ற வெற்றி நிச்சயமாக அவுஸ்திரேலியாவுக்கு புத்துணர்ச்சியை வழங்கியிருக்கும். அதுவும், ஆஷஸுக்கு முன்னர் இனி வேறெந்த டெஸ்டும் இல்லாத நிலையில், அறிமுகத்தை மேற்கொண்ட இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்ஸனும் இளம் வீரர்களான மர்னுஸ் லபுஷைன், ட்ரெவிஸ் ஹெட் ஆகியோர் பிரகாசித்தமை அவுஸ்திரேலியாவுக்கு சாதகங்களை வழங்குகின்றது.

அந்தவகையில், இளம் வீரர்களிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகளை அவுஸ்திரேலியா எதிர்பார்ப்பதுடன், சிரேஷ்ட வீரர்களான உஸ்மான் கவாஜா, மிற்செல் ஸ்டார்க் ஆகியோரிடமிருந்தும் குறிப்பிடத்தக்களவான பெறுபேறுகளை அவுஸ்திரேலியா எதிர்பார்க்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .