2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆர்சனலை வென்றது செல்சி

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்சனலுடனான போட்டியில் செல்சி வென்றிருந்தது.

இப்போட்டியின் ஒன்பதாவது நிமிடத்திலேயே, மார்கோஸ் அலோன்ஸோவிடமிருந்து வந்த உதையை பெட்ரோ கோலாக்கி செல்சிக்கு முன்னிலையை வழங்கினார். தொடர்ந்த ஆட்டத்தில், ஆர்சனலின் பியரி எம்ரிக் அபுமெயாங் கோல் கம்பத்துக்கருகிலிருந்து உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்குள் மேலால் சென்றிருந்ததைத் தொடர்ந்து போட்டியின் 20ஆவது நிமிடத்தில் சீஸர் அத்பிலிகெட்டாவிடமிருந்து பெற்ற பந்தை அல்வரோ மொராட்டா கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, பியரி எம்ரிக் அபுமெயாங் போன்று கோல் கம்பத்துக்கருலிருந்து கோல் கம்பத்துக்கு மேலால் பந்தைச் செலுத்தி கோல் பெறும் வாய்ப்பை வீணாக்கிய ஹென்றிக் மிகித்தரயான் போட்டியின் 37ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடனும் அதற்கடுத்த நான்காவது நிமிடத்தில் அலெக்ஸ் இவோபி பெற்ற கோலுடனும் கோலெண்ணிக்கையை ஆர்சனல் சமப்படுத்தியது.

எனினும், முதற்பாதி முடிவடைவதற்கு முன்னர் அபுமெயாங்கும் இவோபியும் மேலதிக வாய்ப்புகளை வீணாக்கிய நிலையில், போட்டியின் 81ஆவது நிமிடத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய ஈடின் ஹஸார்ட்டிடமிருந்து வந்த பந்தை மார்கோஸ் அலோன்ஸோ கோலாக்க இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

இதேவேளை, வெம்ப்ளியில் நேற்று  இடம்பெற்ற புல்ஹாமுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டன்ஹாம் சார்பாக, லூகாஸ் மோரா, கெய்ரான் ட்ரிப்பியர், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் மிற்றோவிக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று  நடைபெற்ற செளதாம்டனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றிருந்தது. எவெர்ற்றன் சார்பாக, தியோ வொல்கொட், றிச்சர்லிஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி இங்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டர்ஸ் அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லெய்சஸ்டர் சிற்றி வென்றிருந்தது. லெய்சஸ்டர் சிற்றி சார்பாக ஜேம்ஸ் மடிஸன் ஒரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .