2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆறாவது தடவையாக பலூன் டோரை வென்ற மெஸ்ஸி

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் இவ்வாண்டுக்கான பலூன் டோர் விருதை இன்று அதிகாலை வென்ற ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவர் லியனல் மெஸ்ஸி, இவ்விருதை ஆறாவது ஆண்டாக இம்முறை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆர்ஜென்டீனா சர்வதேச கால்பந்தாட்ட அணியின் தலைவருமான லியனல் மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காகவும், ஆர்ஜென்டீனாவுக்காகவும் கடந்த 2018-19 பருவகாலத்தில் 54 கோல்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, முன்களவீரரான லியனல் மெஸ்ஸி, கடந்த பருவகாலத்தில் லா லிகாவையும் வென்றிருந்தார்.

பலூன் டோர் விருதுக்கான போட்டியில் இரண்டாமிடத்தை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், நெதர்லாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பின்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக் பெற்றிருந்தார்.

இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும், போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, குறித்த விருதுப் பட்டியலில் மூன்றாமிடத்தைப் பிடித்திருந்தார்.

இந்நிலையில், சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை லிவர்பூலினதும், பிரேஸில் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் கோல் காப்பாளரான அலிஸன் பெற்றுக் கொண்டார். பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் ஆகியோரைத் தாண்டியே குறித்த விருதை அலிஸன் பெற்றிருந்தார்.

இதேவேளை, சிறந்த 21 வயதுக்குட்பட்ட வீரருக்கான விருதை ஜுவென்டஸின் பின்களவீரரான மத்தியாஸ் டி லிஜிட் பெற்றிருந்தார். ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோ, ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான ஜோவா பீலிக்ஸ் ஆகியோரைத் தாண்டியே குறித்த விருதை மத்தியாஸ் டி லிஜிட் பெற்றிருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கான பலூன் டோர் விருதை ஐக்கிய அமெரிக்காவின் முன்களவீரரான மேகன் றபினோ பெற்றிருந்தார். இங்கிலாந்தின் பின்களவீராங்கனை லூயிஸ் ப்றோன்ஸ், சக ஐக்கிய அமெரிக்க முன்களவீராங்கனை அலெக்ஸ் மோர்கன் ஆகியோரைத் தாண்டியே குறித்த விருதை மேகன் றபினோ வென்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .