2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆஷஸில் ஸ்பொட் ஃபிங்சிங்?

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி, நேற்று (14) ஆரம்பித்த போதிலும், போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளியான செய்தி, அப்போட்டியின் கவனத்தை, வேறு இடங்களுக்கு மாற்றியிருந்தது.

இங்கிலாந்தின் குறும்பத்திரிகையான "த சண்", இந்தப் போட்டியில் ஸ்பொட் ஃபிக்சிங் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனச் செய்தி வெளியிட்டது.
பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இரண்டு பேர், மாறுவேடத்தில் சென்றபோது, இப்போட்டியின் சில பகுதிகளை நிர்ணயிப்பதற்கு, 187,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அவர்கள் கோரினர் என்று, அவ்வூடகம் செய்தி வெளியிட்டது.

குறிப்பிட்ட நபர்களால், போட்டியின் முடிவை முழுமையாக நிர்ணயிப்பதை விட, ஓர் ஓவரில் எத்தனை ஓட்டங்கள் பெறப்படும் போன்ற விடயங்களை நிர்ணயிப்பதற்கே, குறித்த நபர்கள் முன்வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த குறித்த இரண்டு நபர்களும் சோபர்ஸ் ஜோபன், பிரியங்க் சக்ஸேனா என இனங்காணப்பட்டுள்ளனர்.

போட்டிக்கு முன்னராக, "இந்த ஓவரில் இத்தனை ஓட்டங்கள் என்பதை நான் வெளிப்படுத்துவேன். அதன்மூலமாக, சூதாட்டத்தில் நீங்கள் பணத்தைச் செலுத்தலாம்" என்று, அதிலொருவர் குறிப்பிட்டார் என, த சண் தெரிவிக்கிறது.

கையுறைகளை மாற்றுவது போன்ற விடயங்கள் மூலமாக, வீரர்கள் தமது சமிக்ஞையை வெளிப்படுத்துவர் என, அவர்களால் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் என, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து என, இரு நாடுகளையும் சேர்ந்த எந்த வீரரும் பெயரிடப்படவில்லை. அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில், "த சைலன்ட் மான்" (அமைதியான மனிதர்) என்று அறியப்படும் ஒருவரோடு, தாங்கள் பணிபுரிவதாகத் தெரிவித்த அவர்கள், முன்னாள், இந்நாள் சர்வதேச வீரர்களோடு அவர் இணைந்து செயற்படுகிறார் என்று தெரிவித்தனர். அவ்வாறானவர்களில், உலகக் கிண்ணத்தை வென்ற, சகலதுறை வீரர் ஒருவரும் உள்ளடங்குகிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆஷஸ் தொடர் தவிர, அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக், இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் ஆகியனவற்றிலும், இவ்வாறு ஸ்பொட் ஃபிக்சிங்குகளை மேற்கொள்ள முடியமென, அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்தத் தகவல்கள் எவ்வளவு உண்மையானது என்பதில் சந்தேகம் காணப்படுகிறது. அத்தோடு, இப்படியான தகவல்களை, போட்டி ஆரம்பிக்க முன்னரேயே த சண் வெளியிட்டமை மூலம், அத்தகவல்கள் உண்மையானவையா என்பதையும் உறுதிப்படுத்த முடியாமல் போனது.

2010ஆம் ஆண்டில், த சண் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான "நியூஸ் ஒஃப் த வேர்ள்ட்" பத்திரிகை, பாகிஸ்தான் அணியின் வீரர்களான சல்மான்ப ட், மொஹமட் ஆசிப், மொஹமட் ஆமிர் ஆகியோர், பணத்தை வாங்கிக் கொண்டு, முறையற்ற பந்துகளை வீசுவதற்குச் சம்மதித்தனர் என்பதை வெளிப்படுத்தியிருந்ததோடு, அந்த முறையற்ற பந்துகள் வீசப்பட்ட பின்னரே அவற்றைப் பகிரங்கப்படுத்தியதால், உண்மையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்திருந்தது.

இச்செய்தி அறிக்கை தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் சபையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும், தமது கவனத்தைச் செலுத்தியுள்ளன.

பேர்த்தில் இடம்பெற்றுவரும் மூன்றாவது போட்டி, மோசடியான போட்டியாக இருக்கிறது என்பதற்கான, எந்தவோர் ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்ட சர்வதேச கிரிக்கெட் சபை, எனினும் இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டது.
குறித்த பத்திரிகையிடமிருந்து மேலதிகமான தகவல்களைப் பெற்று, முழுமையான விசாரணையொன்றை மேற்கொண்டு வருவதாக, சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .