2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இ – 20 தொடர் இன்று ஆரம்பிக்கின்றது: தென்னாபிரிக்காவுக்கு சவாலை வழங்குமா இலங்கை?

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், கேப் டெளணில் இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்த இலங்கை, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 0-5 என வெள்ளையடிக்கப்பட்ட நிலையிலேயே இத்தொடரை எதிர்கொள்கிறது.

அதுவும், இன்னும் இரண்டு மாதங்களுக்கும் சற்றும் அதிகமான காலப்பகுதியில் உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் இலங்கை பெற்ற பாரிய வித்தியாசத்துடனான தோல்விகள், அவ்வணிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளன.

அந்தவகையில், இலங்கையின் உலகக் கிண்ண குழாமின் அனைத்து இடங்களும் ஏறத்தாழ வெற்றிடமாகவே உள்ள நிலையில், அக்குழாமில் இடம்பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான இன்னொரு சந்தர்ப்பமாக குறித்த தொடர் காணப்படுகின்றது.

குறிப்பாக, இளம் ஆரம்பத்துடுப்பாட்டவீரர்கள் அவிஷ்க பெர்ணான்டோ, சதீர சமரவிக்கிரம, மத்தியவரிசை துடுப்பாட்டவீரர்கள் அஞ்சலோ பெரேரா, கமிந்து மென்டிஸ், பிரியமல் பெரேரா, வேகப்பந்துவீச்சாளர் அசித பெர்ணான்டோ, இசுரு உதான, சுழற்பந்துவீச்சாளர் ஆகியோர் தமது திறமைகளை இத்தொடரில் வெளிப்படுத்துவதன் மூலம் உலகக் கிண்ணத்துக்கு கருத்திற் கொள்ளப்படலாம்.

இதேவேளை, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, திஸர பெரேரா, சுரங்க லக்மால், அகில தனஞ்சய, லக்‌ஷன் சந்தகான் ஆகியோர் உறுதியான பெறுபேறுகளை வெளிப்படுத்தி தமது இடங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

மறுபக்கமாக, தென்னாபிரிக்கக் குழாமில் இடம்பெற்றுள்ள றீஸா ஹென்ட்றிக்ஸ், ஏய்டன் மர்க்ரம் ஆகியோருக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இன்னொரு வாய்ப்பாக குறித்த தொடர் காணப்படுவதுடன், ஜெ.பி. டுமினி தன்னை நிரூப்பித்துக் காட்டுவதற்கான தொடராகவும் இத்தொடர் காணப்படுகிறது.

இதுதவிர, வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நொர்ட்ஜே, சகலதுறைவீரர் டுவைன் பிறிட்டோறியஸ், துடுப்பாட்டவீரர் றஸி வான் டர் டுஸன் ஆகியோருக்கும் தமது திறமைகளை உலகக் கிண்ணத்துக்கு முன்னர் வெளிக்காட்டுவதற்கான இறுதித் தொடராக குறித்த தொடர் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .