2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இங்கிலாந்திடம் தோல்வியுற்றபோதும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றிருந்த நிலையில், தற்போது நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் இரண்டு தடவைகள் மோதியிருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடனும் இங்கிலாந்துடனும் இரண்டு தடவைகளும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.

மறுபக்கம், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றிருந்த நிலையில், ஹமில்டனில் இன்று இடம்பெற்ற போட்டியில் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பெற்று, நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை முந்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெறலாம். இல்லாவிடின் நியூசிலாந்தே இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் நிலை காணப்பட்டது.

இந்நிலையில், இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 80 (46), டேவிட் மலன் 53 (36) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 3, டிம் செளதி 2, இஷ் சோதி, கொலின் டி கிரான்ட்ஹொம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அந்தவகையில், தமது ஓட்ட எண்ணிக்கையை இங்கிலாந்தை முந்த விடாது இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தாம் தகுதிபெறுவதற்கு 175 ஓட்டங்கள் மட்டுமே நியூசிலாந்துக்கு போதுமாக இருந்த நிலையில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்து, இரண்டு ஓட்டங்களால் இப்போட்டியில் தோல்வியடைந்தபோதும் இறுதிப் போட்டிக்குக்குத் தகுதிபெற்றது. துடுப்பாட்டத்தில், மார்டின் கப்தில் 62 (47), கொலின் மன்றோ 57 (21), மார்க் சப்மன் ஆட்டமிழக்கமால் 37 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் றஷீட், லியாம் டோஸன், டொம் குரான், டேவிட் மலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, ஒய்ன் மோர்கன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X