2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இலண்டன் ஓவலில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்திடம் பெற்ற அதிர்ச்சித் தோல்வியுடன் இத்தொடரை ஆரம்பித்தாலும் அவுஸ்திரேலியாவை விட பலம் மிக்கதாகக் காணப்படுவதோடு, தொடரைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்தால், தரவரிசையில் இந்தியாவிடம் முதலிடத்தைப் பறிகொடுத்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்க வேண்டியேற்படும்.

மறுபக்கமாக, பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சைகளைத் தொடர்ந்து தமது முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் உப அணித்தலைவர் டேவிட் வோணர் ஆகியோரை இழந்த பின்னராக புதிய பயிற்சியாளர், புதிய அணித்தலைவரென களமிறங்கும் அவுஸ்திரேலியாவுக்கு குறிப்பிடத்தக்களவு கடினமானதாகவே இத்தொடர் காணப்படப் போகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்படும் அவுஸ்திரேலியா, இத்தொடரை 0-5 என ரீதியில் வெள்ளையடிக்கப்பட்டு இழந்தால் மாத்திரமே தனது ஐந்தாமிடத்தை ஆறாமிடத்திலுள்ள பாகிஸ்தானிடம் பறிகொடுத்து ஆறாமிடத்துக்கு கீழிறங்கும். மறுபக்கமாக, இத்தொடரை 5-0 என இங்கிலாந்தை வெள்ளையடித்துக் கைப்பற்றும் பட்சத்தில் நான்காமிடத்திலுள்ள நியூசிலாந்தை பின்தள்ளி ஐந்தாமிடத்துக்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்திடம் தோற்ற இங்கிலாந்துக்கு, ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் குழாமுக்கு மீளத் திரும்புவது பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கமாக, டிம் பெய்னின் தலைமையில் களமிறங்கும் அவுஸ்திரேலியாவுக்கான வெற்றிவாய்ப்புகள் ஆரோன் பின்ஞ், ட்ரெவிஸ் ஹெட், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரின் துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .