2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து எதிர் இந்தியா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பேர்மிங்ஹாமில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி இத்தொடரில் 5-0 என இங்கிலாந்தால் வெள்ளையடிக்கப்பட்டாலும் முதலிடத்திலேயே தொடரும். ஆனால், ஐந்தாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து, 5-0 என இந்தியாவை வெள்ளையடித்தால் அல்லது 4-0 என தொடரை வென்றால் இரண்டாமிடத்துக்கு முன்னேறக் கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது. இதுதவிர, வேறு எவ்வாறாவது தொடரைக் கைப்பற்றினால் நான்காமிடத்துக்கு முன்னேற முடியும். மறுபக்கமாக, 5-0 என இந்தியாவால் வெள்ளையடிக்கப்பட்டால் அல்லது 4-0 அல்லது 4-1 அல்லது 3-0 என தொடரை இங்கிலாந்து இழந்தால் ஆறாமிடத்துக்கு கீழிறங்கும். மற்றும்படி வேறெந்த முடிவு பெறப்பட்டாலும் ஐந்தாமிடத்திலேயே இங்கிலாந்து நீடிக்கும்.

இரண்டு அணிகளுக்குமிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பிரகாசித்தமை, வழமைக்கு மாறாக இங்கிலாந்தில் அதிக வெப்பமான வானிலை நிலவுவதன் காரணமாக சுழற்பந்துவீச்சு இத்தொடரில் தாக்கம் செலுத்தும் எனக் கூறப்பட்டபோதும் முதலாவது டெஸ்ட் இடம்பெறவுள்ள பேர்மிங்ஹாமில் அண்மைய நாட்களில் மழை பெய்தநிலையில் ஆகக்குறைந்தது முதலாவது டெஸ்டிலாவது சுழற்பந்துவீச்சு குறிப்பிடத்தக்களவு ஆதிக்கம் செலுத்தாது என்றே கருதப்படுகிறது.

அந்தவகையில், இரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறுவதோடு, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமியோடு சகலதுறை வீரராக ஹர்டிக் பாண்டியாவும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொஹமட் ஷமிக்குப் பதிலாக இரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

துடுப்பாட்டப் பக்கம், 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் விராத் கோலி தடுமாறியிருந்தாலும் அணித்தலைவராகவும் அணியின் முதன்மை துடுப்பாட்ட வீரராகவும் அவர் பெறப்போகும் ஓட்டங்களே இந்திய அணியின் வெற்றிவாய்ப்புகளைத் தீர்மானிக்கப் போகின்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் எவரைக் களமிறக்குவதென்ற சிக்கல் காணப்படுகின்றபோதும் ஆகக் குறைந்தது முதலிரண்டு டெஸ்ட்களுக்காவது முரளி விஜயும் ஷீகர் தவானும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சிப் போட்டியில் பிரகாசிக்கா விட்டாலும் செட்டேஸ்வர் புஜாராவே மூன்றாமிடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதுடன் அடுத்தடுத்த இடங்களில் அஜின்கியா ரஹானேயும் தினேஷ் கார்த்திக்கும் களமிறங்குவர்.

இங்கிலாந்து அணியில், அதன் தலைவர் ஜோ றூட் தனது ஓட்ட எண்ணிக்கையை எவ்வாறு சதமாக, 150 ஓட்டங்களாக, இரட்டைச் சதமாக மாற்றுகின்றார் என்பதிலேயே அவ்வணியின் வெற்றி தங்கியிருக்கிறது. இவர் தவிர, ஜொனி பெயார்ஸ்டோ, ஜொஸ் பட்லர் பெறுகின்ற ஓட்டங்கள்தான் இத்தொடரின் இங்கிலாந்துக்கான வெற்றி வாய்ப்பை வழங்கப் போகின்றன.

பந்துவீச்சுப் பக்கம், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட்டுடன் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அறிமுக வீரர் ஜேமி போர்ட்டர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கமாக, இங்கிலாந்தின் கவுண்டி சம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியிருக்காத அடில் ரஷீட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டிருந்தமையைக் கருத்திற்கொண்டு குழாமில் சேர்க்கப்பட்டிருந்தமை பலத்த விமர்சனங்களைச் சந்தித்திருந்த நிலையில், தற்போது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகள் காணப்படும் முதலாவது டெஸ்டில் அவர் விளையாடமாட்டார் என்றே கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .