2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்:ஆர்சனல், யுனைட்டெட் தோற்றன

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன தோற்றுள்ளன.

தமது மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியிலேயே ஆர்சனல் தோல்வியடைந்திருந்தது.

இப்போட்டியின் 17ஆவது நிமிடத்தில், தனதணித்தலைவரும் சக மத்தியகளவீரருமான லூகா மிலிவோஜிக்கிடமிருந்து பெற்ற பந்தை கிறிஸ்டல் பலஸின் முன்களவீரரான கிறிஸ்டியன் பென்டெக்கே தலையால் முட்டிக் கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், போட்டியின் முதற்பாதி முடிவு வரைக்கும் குறித்த கோலொன்றே பெறப்பட்ட நிலையில், முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டன் பலஸ் முன்னிலை வகித்தது. எவ்வாறெனினும், இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய ஆர்சனலின் முன்களவீரரான அலெக்ஸ் இவோபி, தனது சக முன்களவீரரான அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயிடம் பந்தை வழங்க, அவர் அதை சக மத்தியகளவீரர் மெசுட் ஏஸிலிடம் வழங்க, அவர் அதைக் கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து போட்டியின் 61ஆவது நிமிடத்தில், ஆர்சனலின் பின்களவீரர் ஸ்கொட்ரான் முஸ்டாஃபியின் தவறைப் பயன்படுத்தி கிறிஸ்டல் பலஸின் முன்களவீரர் வில்ஃபிரைட் ஸாகா பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற அவ்வணி, அடுத்த எட்டாவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் ஜேம்ஸ் மக்ஆர்தர் பெற்ற கோல் காரணமாக தமது முன்னிலையை 3-1 என்ற கோல் கணக்கில் அதிகரித்துக் கொண்டது.

இந்நிலையில், ஆர்சனலின் முன்களவீரர் பியரி எம்ரிக் அபுமெயாங்க், போட்டியின் 77ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றபோதும் அவ்வணி இறுதியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது. எவெர்ற்றன் சார்பாக, இஷார்ள்சன், ஜைல்பி சிகோர்ட்ஸன், லூகாஸ் டிக்னே, தியோ வொல்கொட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், கார்டிஃப் சிற்றியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. லிவர்பூல் சார்பாக, ஜோர்ஜினியோ விஜ்னால்டும், ஜேம்ஸ் மில்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .