2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: மீண்டும் முதலாமிடத்துக்கு முன்னேறியது லிவர்பூல்

Editorial   / 2019 மே 05 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியுள்ளது.

நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலாமிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியுள்ளது.

இப்போட்டியின் 13ஆவது நிமிடத்திலேயே, சக பின்களவீரரான ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்டின் மூலையுதையை தலையால் முட்டிக் கோலாக்கிய லிவர்பூலின் இன்னொரு முன்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக் தனதணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.

எவ்வாறெனினும், அடுத்த ஏழாவது நிமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டின் முன்களவீரர் சலோமன் றொன்டனின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் கையில் பட்டுத் திரும்பி வந்திருந்த நிலையில், அதை அவரின் சக முன்களவீரரான கிறிஸ்தியன் அட்சு கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில், அடுத்த எட்டாவது நிமிடத்தில் லிவர்பூலின் காயமடைந்த முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய இன்னொரு முன்களவீரரான டேனியல் ஸ்டரிட்ஜ் பின்காலால் கொடுத்த பந்தை, ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட் சக முன்களவீரர் மொஹமட் சாலாவிடம் வழங்க அவர் அதைக் கோலாக்கி தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

அந்தவகையில், முதற்பாதி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது பாதியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோலைப் பெற்ற சலோமன் றொன்டன் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

எனினும், போட்டி முடிவடைய நான்கு நிமிடங்களிருக்கையில் மாற்றுவீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் ஸ்கொட்ரான் ஷகியின் பிறீ கிக்கை, நியூகாசில் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் மார்டின் டுப்ரவ்காவுடன் மோதுண்டு களத்துக்கு வெளியே சென்ற மொஹமட் சாலாவை பிரதியிட்ட இன்னொரு முன்களவீரரான டிவோக் ஒரிஜி கோலாக்க இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .