2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

Editorial   / 2018 ஜனவரி 03 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கின்றது.

மூன்றாவது போட்டி முடிவிலேயே அவுஸ்திரேலியா ஆஷஸைக் கைப்பற்றிய நிலையில், நான்காவது போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது. ஆக, தொடரை இழந்தபோதும் அலிஸ்டயர் குக், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் நான்காவது டெஸ்டில் பிரகாசித்திருந்தது போன்று இப்போட்டியை இங்கிலாந்து வெல்ல முயலும் என்பதுடன் ஜேம்ஸ் வின்ஸ் போன்றவர்களுக்கு இப்போட்டி இறுதி வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இடுப்புக்கும் தோட்பட்டைக்குமிடைப்பட்ட இடது பக்கத்தில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக, புறச்சுழற்பந்துவீச்சாளர் மேஸன் கிரேன் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்கிறார். அந்தவகையில், இப்போட்டியில், மொயின் அலி அல்லது டொம் குரானுக்குப் பதிலாகவே மேஸன் கிரேன் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தமது இடங்களை இப்போட்டியில் தக்க வைத்துள்ளனர்.

மறுபக்கம் குதிக்கால் உபாதை காரணமாக நான்காவது போட்டியைத் தவறவிட்ட அவுஸ்திரேலிய அணியின் மிற்செல் ஸ்டார்ட் உடற்றகுதியில் தேறி தன்னை அப்போட்டியில் பிரதியீடு செய்த ஜக்ஸன் பேர்ட்டை பிரதியீடு செய்கிறார். ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டதால், அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்தன் அகர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

துடுப்பாட்டப் பக்கம், இந்த ஆஷஸ் தொடரில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளைக் கொண்டிருக்காத ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரோன் பன்குரோப்ட், முன்வரிசை துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா ஆகியோருக்கான இறுதி வாய்ப்புகளாக இப்போட்டி காணப்படுகிறது. ஏனெனில், அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவுக்கு டெஸ்ட் போட்டிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ள முன்னர் அவுஸ்திரேலியாவில் முதற்தரப் போட்டிகள் இல்லை.

இரண்டு அணிகளும் தமது விளையாடும் பதினொருவரை அறிவித்துள்ளன. அவ்விபரம் பின்வருமாறு.

அவுஸ்திரேலியா: 1. கமரோன் பன்குரோப்ட், 2. டேவிட் வோணர், 3. உஸ்மான் கவாஜா, 4. ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), 5. ஷோர்ன் மார்ஷ், 6. மிற்செல் மார்ஷ், 7. டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), 8. மிற்செல் ஸ்டார்க், 9. பற் கமின்ஸ், 10. ஜொஷ் ஹேசில்வூட், 11. நேதன் லையன்.

இங்கிலாந்து: 1. அலிஸ்டயர் குக், 2. மார்க் ஸ்டோன்மன், 3. ஜேம்ஸ் வின்ஸ், 4. ஜோ றூட் (அணித்தலைவர்), 5. டேவிட் மலன், 6. ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), 7. மொயின் அலி, 8. டொம் குரான், 9. ஸ்டூவர்ட் ப்ரோட் 10. மேஸன் கிரேன், 11. ஜேம்ஸ் அன்டர்சன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .