2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் நாளை: பதிலடி வழங்குமா இலங்கை?

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்டில் இலங்கை 211 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில், கண்டி பல்லேகலையில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது டெஸ்டில் வென்று இங்கிலாந்தின் தொடர் வெற்றியை இலங்கை தடுத்து பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதுவும் அண்மைய காலங்களில் தமது டெஸ்ட் அணியின் முதுகெலும்பாகக் காணப்படும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இல்லாமலே இங்கிலாந்துக்கு பதிலடி வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை காணப்படுகின்றது.

அந்தவகையில், அணியின் தூணாக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸே நோக்கப்படுவதோடு, அவரோடு இணைந்து சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர் திமுத் கருணாரத்னவும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தாலே இலங்கையணிக்கான வெற்றிவாய்ப்புகள் உருவாகும். இவர்கள் தவிர, இளம் வீரர்களான குசல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் பெரியதோர் ஓட்ட எண்ணிக்கைகளை பெற வேண்டியநிலையிலுள்ளனர்.

பந்துவீச்சுப்பக்கம், ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பின்னராக முதலாவது போட்டியில் களமிறங்கப் போகும் இலங்கை ஏறத்தாழ அவர் மாதிரியான சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமாரவின் மூலமே அவரது இடத்தை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்தையா முரளிதரன் இருக்கும்போது வாய்ப்பில்லாமல் இருந்த ஹேரத், பின்னர் பிரகாசித்திருந்த நிலையில், ஹேரத் இருந்தமை காரணமாக அவர் மாதிரியான பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார இதுவரையிலும் தனது இடத்துக்காக தடுமாறியிருந்தார்.

இலங்கையின் பதில்தலைவர் சுரங்க லக்மால் நேற்று உறுதிப்படுத்தியது போல அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக ஆடுகளம் காணப்படுகின்ற நிலையில், அவருடன் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, ஜொனி பெயார்ஸ்டோ நேற்று பயிற்சிக்குத் திரும்பியிருந்தபோதும் முதலாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்தின் அதேயணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இங்கிலாந்தின் மூன்றாமிலக்க வீரராக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி ஸ்டோக்ஸ் அதிகளவு நேரம் பந்துவீசியிருந்தால் ஜொஸ் பட்லர் மூன்றாமிடத்தில் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .