2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியன் சுப்பர் லீக்: சம்பியனானது பெங்களூரு எஃப்.சி

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான இந்தியன் சுப்பர் லீக்கில், பெங்களூரு எஃப்.சி சம்பியனானது. மும்பையில், நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், எஃப்.சி கோவாவை வென்றே பெங்களூரு எஃப்.சி முதற்தடவையாக இந்தியன் சுப்பர் லீக்கில் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியை இரண்டு அணிகளும் தாக்குதலில் ஈடுபடாமல் கவனமாகவே ஆரம்பித்திருந்தநிலையில், தமது மத்தியகளவீரர் ஜக்கிசன்ட் சிங்குக்கு, எஃப்.சி கோவா நீண்ட துரத்திலிருந்து பந்துகளை அனுப்பிக் கொண்டிருந்தபோதும், அவர் பெங்களூர் எஃப்.சியின் பெனால்டி பகுதியை நோக்கி உதைந்த பந்துகளை கோலாக்க எவருமிருக்கவில்லை.

இந்நிலையில், போட்டியின் 22ஆவது நிமிடத்தில் சக மத்தியகள வீரர் டிமாஸ் டெல்கடோவிடமிருந்து பெற்ற பந்தை, பெங்களூரு எஃப்.சியின் முன்கள வீரர் சுனில் சேத்ரி, சக முன்கள வீரர் மிகுவிடம் வழங்கியபோதும், அவர் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தை நோக்கிச் சென்றிருக்கவில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சக மத்தியகள வீரர் எடு பெடியா வழங்கிய பந்தைப் பெற்ற ஜக்கிசன்ட், கோல் கம்பத்தை நோக்கி அதை உதைந்தபோதும் அது தடுக்கப்பட்டிருந்தது. தடுக்கப்பட்ட பந்து, எஃப்.சி கோவாவின் பிரண்டன் பெர்ணான்டஸிடம் வந்தபோதும் அவர் அதை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.

அந்தவகையில், இரண்டாவது பாதியிலும் கோலெதுவும் பெறப்படாமல், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்ற நிலையில், மேலதிக நேரத்தின் இறுதி நிமிடங்களில், சக மத்தியகளவீரர் டிமாஸ் டெல்கடோவிலிருந்து வந்த பந்தை பெங்களூரு எப்.சியின் பின்களவீரர் ராகுல் பெக்கே தலையால் முட்டிப் பெற்ற கோலோடு, இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற அவ்வணி சம்பியனானது.

இந்நிலையில், இதுவரை இடம்பெற்ற இந்தியன் சுப்பர் லீக்கின் ஐந்து பருவகாலங்களிலும் முதற்தடவையாக, லீக் போட்டிகளில் முன்னிலை பெற்ற பெங்களூரு எப்.சி இம்முறை சம்பியனாகியிருந்தது.

இதேவேளை, இத்தொடரில் சம்பியனானதன் மூலம் ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளன கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு பெங்களூரு எஃப்.சி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .