2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியா எதிர் தென்னாபிரிக்கா: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, விசாகப்பட்டினத்தில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இத்தொடர் இடம்பெறுவதன் பொருட்டு இத்தொடர் முக்கியத்துவம் பெறுவது மாத்திரம் மட்டுமல்லாமல் இத்தொடரில் வெல்லும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள இந்தியாவைப் பின்தள்ளி மூன்றாமிடத்திலுள்ள தென்னாபிரிக்கா முதலாமிடத்துக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக இத்தொடரில் 3-0 என இந்தியாவால் வெள்ளையடிக்கப்படும் பட்சத்தில் நான்காமிடத்துக்கு தென்னாபிரிக்கா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், இது தவிர, 1-0 என்றவோ அல்லது 2-0 என்றதோ அல்லது 2-1 என்ற இந்தியாவின் தொடர் வெற்றிகளும், தொடரின் 0-0 என்ற அல்லது 1-1 என்ற சமநிலை முடிவுகள் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

இந்தியாவில் இந்தியாவை எதிர்கொள்வது எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்ற நிலையில் டேல் ஸ்டெய்ன், ஹஷிம் அம்லாவின் ஓய்வுக்குப் பின்னர் அவர்களில்லாமல் களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணியின் பெறுபேறுகள் பெரும்பாலாக அணித்தலைவர் பப் டு பிளெஸி, ஏய்டன் மர்க்ரம், குயின்டன் டி கொக், வேர்ணன் பிலாந்தர், ககிஸோ றபாடா ஆகியோரிலேயே தங்கிக் காணப்படுகின்றன.

தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சுக் குழாமானது ஏனைய அணிகளை விட கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், வேர்ணன் பிலாந்தர், ககிஸோ றபாடாவோடு லுங்கி என்கிடியும் வேகப்பந்துவீச்சுக் கூட்டணியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, வேர்ணன் பிலாந்தர் துடுப்பெடுத்தாடக்கூடியவர் என்ற நிலையில் ஆறாமிலக்க துடுப்பாட்டவீரர் ஸுபைர் ஹம்ஸாவுக்குப் பதிலாக டேன் பீடிட் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அணித்தலைவர் விராத் கோலி, உப அணித்தலைவர் அஜின்கியா ராஹானே, செட்டேஸ்வர் புஜாரா, ஹனும விஹாரி என பலமான நிலையில் காணப்படுவதோடு, பந்துவீச்சுப் பக்கமும் காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ராவை இழந்தபோதும் இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, இரவீந்திர ஜடேஜாவோடு இரவிச்சந்திரன் அஷ்வினின் மீள்வருகையோடு பலமானதாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில், ஆரம்பத்துடுப்பாட்டவீரராக ரோஹித் ஷர்மாவை பரீட்சிக்கும் களமாக இத்தொடர் விளங்கவுள்ள நிலையில் அவர் இத்தொடரில் அவதானிக்கப்படும் வீரராக விளங்குவார்.

இதேவேளை இப்போட்டியின் மூலம் தனது மீள்வருகையை விக்கெட் காப்பாளர் ரித்திமான் சஹா நிகழ்த்துகின்ற நிலையில், அவர் காயமடைந்த இடைவேளையில் சிறப்பாகச் செயற்பட்ட றிஷப் பண்டை தற்போது அவர் பிரதியிடுகின்ற நிலையில் அவரின் ஒவ்வொரு நகர்வும் நிச்சயம் அவதானிக்கப்படும்.

இந்திய அணி: 1. மாயங்க் அகர்வால், 2. ரோஹித் ஷர்மா, 3. செட்டேஸ்வர் புஜாரா, 4. விராத் கோலி, 5. அஜின்கியா ரஹானே, 6. ஹனும விஹாரி, 7. ரித்திமான் சஹா, 8. இரவிச்சந்திரன் அஷ்வின், 9. இரவீந்திர ஜடேஜா, 10. இஷாந்த் ஷர்மா, 11. மொஹமட் ஷமி.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: 1. டீன் எல்கர், 2. ஏய்டன் மாக்ரம், 3. தெனியுஸ் டி ப்ரூன், 4. தெம்பா பவுமா, 5. பப் டு பிளெஸி, 6. குயின்டன் டி கொக், 7. வேர்ணன் பிலாந்தர், 8. ககிஸோ றபாடா, 9. கேஷவ் மஹராஜ், 10. டேன் பீடிட், 11. லுங்கி என்கிடி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .