2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா எதிர் நியூசிலாந்து: இ-20 தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Editorial   / 2020 ஜனவரி 24 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, ஒக்லன்டில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.20மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரானது இவ்வாண்டு நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்படும் இந்தியாவும், ஆறாமிடத்தில் காணப்படும் நியூசிலாந்தும் இத்தொடரில் மோதுகின்ற நிலையில் இரண்டு அணிகளும் தமது வீரர்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கான சிறந்த களமாக இத்தொடர் காணப்படுகிறது.

இந்நிய அணியைப் பொறுத்தவரையில், தமக்காக அண்மைய காலத்தில் சொந்த மண்ணில் சிறப்பாகச் செயற்பட்ட துடுப்பாட்டவீரர்கள் லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவன் டுபே மற்றும் மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோர் அந்திய மண்ணில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என சோதிப்பதற்கான சிறந்த தளமாக இத்தொடர் காணப்படுகிறது.

இதுதவிர, நியூசிலாந்தின் மைதானங்கள் சிறியவையாகக் காணப்படுகின்ற நிலையில் சிறிய தவறும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோர் இத்தொடரை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதையும் இந்திய அணியின் நிர்வாகம் அறிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும்.

மறுபக்கமாக அவுஸ்திரேலியாவிடம் மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியொன்றைப் பெற்று துவண்டு போயிருக்கும் நியூசிலாந்து புத்துயிர்ப்பு பெறுவது அவசியமாகின்ற நிலையில் இத்தொடர் அதற்கான தளத்தை நியூசிலாந்துக்கு வழங்கியிருக்கின்றது.

அந்தவகையில், இந்தியாவுக்கெதிரான தொடர் வெற்றியென்பது நியூசிலாந்துக்கு சிறந்த மனோபலத்தை வழங்குமென்ற நிலையில், கொலின் டி கிரான்ட்ஹொம், றொஸ் டெய்லர் தவிர அணித்தலைவர் கேன் வில்லியம்சனிலிருந்து, ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் மார்டின் கப்தில், கொலின் மன்றோ, டிம் செய்ஃபேர்ட் ஆகியோரும் பங்களித்தாலே வெற்றி குறித்து நியூசிலாந்து சிந்திக்கலாம்.

இந்நிலையில், பந்துவீச்சுப் பக்கம் லொக்கி பெர்கியூசன், ட்ரெண்ட் போல்ட், அடம் மில்ன், மற் ஹென்றி என காயமடைந்தவர்கள் பட்டியல் நீளுகின்ற நிலையில் டிம் செளதி பொறுப்புணர்ந்து செயற்படவேண்டியுள்ளதுடன், ஹமிஷ் பெனிட் போன்றோர் சிறப்பாகச் செயற்படுமிடத்து அணியில் தமதிடங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X