2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இ – 20 தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Editorial   / 2019 டிசெம்பர் 06 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, ஹைதரபாத்தில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அத்தொடருக்கான பரிசோதனைக் களமாகவே இத்தொடரும் விளங்கப் போகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், அணித்தலைவர் விராட் கோலி, உப அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்டிக் பாண்டியா, தீபக் சஹர், லோகேஷ் ராகுல் உள்ளிட்டவர்களின் இடங்களே உறுதியாயிருக்கின்ற நிலையில், இத்தொடரில் சிறப்பான பெறுபேறுகள் சிலரின் இடங்களை உறுதிப்படுத்துவதுடன், மேலும் சிலருக்கு மேலும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கலாம்.

அந்தவகையில், ஷ்ரேயாஸ் ஐயர், புவ்னேஷ்வர் குமார் ஆகியோரின் இடங்கள் ஓரளவுக்கு உறுதியாயிருக்கின்ற நிலையில், இத்தொடரில் மேலும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துவதன் மூலம் தமது இடங்களை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில், ஷிவம் டுபே, இரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி உள்ளிட்டோர் இத்தொடரில் பிரகாசிப்பதன் மூலம் மேலும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், இத்தொடரைப் பொறுத்த வரையில் மிகுந்த அழுத்தத்திலுள்ளவராக றிஷப் பண்டே கருதப்படுகிறார். அண்மைய காலங்களில் பொறுப்பான இனிங்ஸொன்றை விளையாடாத நிலையில் மிகுந்த அழுத்தத்தை அவர் எதிர்கொள்கின்றார். ஆக, அவர் தனது இடத்தைத் தக்க வைப்பதற்கு சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளார்.

மறுபக்கமாக, ஆப்கானிஸ்தானிடம் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இழந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள், கிறிஸ் கெய்ல், அன்ட்ரே ரஸல் இல்லாமல் பலவீனமாகவே காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், இந்தியாவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் சவாலளிப்பதற்கு எவின் லூயிஸிடமிருந்து தொடர்ச்சியான வேகமான ஆரம்பமும், நிக்கலஸ் பூரான் உள்ளிட்டோரிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகளும் அவசியமாகிறது. வந்த ஆரம்பத்தில் பிரகாசித்த ஷிம்ரோன் ஹெட்மயரின் பெறுபேறுகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அவர் தனது திறமையை நிரூபிக்க பெறுபேறுகளை வெளிப்படுத்துவது கட்டாயமாகிறது.

இதேவேளை, பந்துவீச்சுப் பக்கம் ஷெல்டன் கோட்ரல், கீமோ போல், கெஷ்ரிக் வில்லியம்ஸ் என ஓரளவு பலமானதாக தென்படுகையில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றோரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதன் மூலமே இவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றியை வழங்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .