2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இ-20 தொடர் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லெளடர்ஹில்லில் இலங்கை நேரப்படி நாளை இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்திலும் இந்தியா காணப்படுகின்றபோதும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலேயே காணப்படுகின்றது.

இந்நிலையில், அடுத்தாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணமும் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கும் தம்மை தயார்படுத்தவேண்டியுள்ள இந்தியா, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளை கவனத்துடன் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அணுக வேண்டிய நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரையில் சவாலை வழங்கக்கூடிய மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்வது நிச்சயமாக அதன் எதிர்காலத் திட்டமிடலுக்கு சிறப்பானதாக நோக்கப்படுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில், உலகக் கிண்ணத்தில் அவ்வணியின் கதாநாயகனாக விளங்கிய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மாவே இத்தொடரிலும் முக்கியமானவராகக் காணப்படப் போகின்றார். தவிர, மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷீகர் தவான் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் வந்துள்ளமையும் நிச்சயம் இந்தியாவுக்கு அனுகூலத்தையளிக்கும்.

இதேவேளை, ஜஸ்பிரிட் பும்ராவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், தீபக் சஹர், நவ்தீப் சைனி போன்றோருக்கு தமது திறமையை வெளிக்காட்ட சிறந்த சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது.

மறுபக்கமாக, இத்தொடருக்கான தமது குழாமில் கிறிஸ் கெய்லை கொண்டிருக்காவிட்டாலும், சகலதுறைவீரர் கெரான் பொலார்ட், சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் குழாமுக்குத் திரும்பியுள்ளது நிச்சயமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு பலம் சேர்க்கின்றது.

இதேவேளை வழமைபோன்று சகலதுறைவீரர்கள் அன்ட்ரே ரஸல், அணித்தலைவர் கார்லோஸ் பிறத்வெய்ட்டின் செயற்பாடுகளிலேயே இத்தொடரின் முடிவு தங்கியிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .