2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு போட்டித்தன்மையை வழங்குமா பங்களாதேஷ்?

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் பகலிரவுப் போட்டியாக இன்று மதியம் 1 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில், புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான், அயர்லாந்து தவிர மற்றைய நாடுகள் அனைத்தும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இந்தியாவும், பங்களாதேஷும் மாத்திரமே இதுவரையில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தன.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், பங்களாதேஷும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் களம் காண்கின்றன.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது மூன்று நாட்களுக்குள்ளேயே முடிவடைந்திருந்த நிலையில், இந்திய அணிக்கும் புதிதாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக இருக்கும் பட்சத்திலும், இந்தியாவுக்கு போட்டித்தன்மையை பங்களாதேஷ் வழங்குமா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது.

முதலாவது டெஸ்டில் முஷ்பிக்கூர் ரஹீம் தவிர வேறெந்த துடுப்பாட்டவீரரும் பங்களாதேஷுக்கு நம்பிக்கையளிக்காத நிலையில், இந்தியாவுக்கு போட்டித்தன்மையை வழங்க வேண்டுமானால் அணித்தலைவர் மொமினுல் ஹக், சிரேஷ்ட வீரர் மகமதுல்லா ஆகியோர் பொறுப்புணர்ந்து செயற்படுவதுடன், லிட்டன் தாஸ், மொஹமட் மிதுன் ஆகியோரும் பங்களிக்க வேண்டியுள்ளது.

இப்போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் நான்காமிடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்ருல் கைஸின் பெறுபேறுகள் மோசமாக இருக்கின்றபோதும், குழாமில் இருக்கின்ற மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் சைஃப் ஹஸன் காயமடைந்துள்ள நிலையில் இம்ருல் கைஸ் அணியில் தொடரவுள்ளார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை பங்களாதேஷுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய விதத்தில் அபு ஜயெட் காணப்பட்டிருந்த நிலையில், வேகப்பந்துவீச்சாளர்களிடம் நம்பிக்கை வைத்து இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவருக்குப் பதிலாக மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அல்-அமின் ஹொஸைனை பங்களாதேஷ் களமிறக்கினால் அது அவ்வணிக்கு அனுகூலம் வழங்கக்கூடியதாக இருக்கும்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு குறைகள் எதுவும் இல்லாத நிலையில் முதலாவது போட்டியில் களமிறங்கிய அதேயணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் மென்சிவப்பு நிறப் பந்தின் நிறமானது விரைவாக இழப்பதைத் தடுப்பதற்காக புற்களை அதிகம் கொண்டதாகவே ஆடுகளம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், வேகப்பந்துவீச்சாளர்கள் இப்போட்டியில் முக்கியத்துவம் பெறுவர்.

இந்நிலையில், இரவில் பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X