2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடர், வெலிங்டனில் இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியாவிடம் இழந்திருந்த நியூசிலாந்து, இந்தியாவை பழிவாங்கக் காத்திருக்கையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் அதற்குரிய சிறந்த சந்தர்ப்பமாகக் காணப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இந்தியாவும் ஆறாமிடத்தில் நியூசிலாந்தும் காணப்படுகின்றபோதும் இந்தியாவுக்கெதிராக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை நியூசிலாந்து வெளிப்படுத்தியது.

அந்தவகையில், இந்தியாவுக்கெதிரான இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் மேம்பட்டதாக இருந்த நியூசிலாந்தின் அதே பந்துவீச்சுடன் துடுப்பாட்டமும் கைகொடுக்கும் நிலையில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தலாம்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சொதப்பியிருந்தாலும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் வேறொரு வீரராகத் தோற்றமளிக்கின்ற கொலின் மன்றோவுன் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லர் ஆகியோர் பிரகாசித்தால் நியூசிலாந்து வெற்றிக்கனியை சுவைக்கலாம். காயம் காரணமாக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மார்டின் கப்தில் இத்தொடரிலிருந்து விலகியிருந்தாலும் அவருக்குப் பதிலாக குழாமில் இடம்பெற்றுள்ள ஜேம்ஸ் நீஷம், அண்மைய காலத்தில் சிறந்த துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியது நியூசிலாந்துக்கு சாதகமானதாகக் காணப்படுகிறது.

மறுபக்கமாக, அணித்தலைவர் விராத் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி பலமானதாகவே காணப்படுகிறது. உலகக் கிண்ணத்துக்கு முன்னர், அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில், உலகக் கிண்ணக் குழாமில் எஞ்சியுள்ள ஓரிரு இடங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியை வழங்கும் தொடராக இத்தொடர் அமைகின்றது.

அந்தவகையில், றிஷப் பண்ட், குருனால் பாண்டியா, விஜய் ஷங்கர் ஆகியோர் அணியில் இடம்பெற்றால், அவர்களின் பெறுபேறுகள் உலகக் கிண்ணக் குழாமில் அவர்களுக்கான இடங்களைத் தீர்மானிக்கும்.

இத்தொடரில் 3-0 என இந்தியாவை நியூசிலாந்து வெள்ளையடித்தால், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு நியூசிலாந்து முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இத்தொடரின் எந்தவித முடிவும் அணியின் தரவரிசையில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X