2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்டர் மிலனை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலன் அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் சீரி ஏயின் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியின் 13ஆவது நிமிடத்தில் தமதணியின் டக்ளஸ் கொஸ்டா பெற்ற கோலின் மூலமாக ஆரம்பத்தில் ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், ஜுவென்டஸின் மரியோ மண்டூஸிக்கின் முழங்காலுக்கு கீழான பகுதியில் இன்டர் மிலனின் மடியாஸ் வெசினோ உதைய, காணொளி உதவி மத்தியஸ்தரின் உதவியுடன் மத்தியஸ்தர் டானியல் ஒர்ஸட்டோவால் மடியாஸ் வெசினோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, 10 பேரோடே விளையாடிய இன்டர் மிலனுக்கு மேலுமொரு அடியாக முதற்பாதியின் இறுதி நிமிடங்களில் ஜுவென்டஸின் பிளெய்ஸி மத்தியூடி கோல் பெற்றதாக மத்தியஸ்தர் டானியல் ஒர்ஸட்டோ தீர்ப்பு வழங்கினார். எனினும் இன்டர் மிலனின் கடுமையான முறைப்பாடுகளைத் தொடர்ந்து காணொளிகளை மத்தியஸ்தர் டானியல் ஒர்ஸட்டோ பார்வையிட்டபோது பிளெய்ஸி மத்தியூடி ஓவ் சைட்டில் இருந்து வந்து கோலைப் பெற்றது தெளிவாகத் தெரிய குறித்த கோல் இல்லாமல் போக ஒரு கோலால் மாத்திரம் பின்தங்கிய நிலையில் முதற்பாதியை இன்டர் மிலன் முடித்துக் கொண்டது.

பின்னர் இரண்டாவது பாதியின் ஏழாவது நிமிடத்தில், சக வீரர் ஜோவா கான்செலோவின் பிறீ கிக்கை தலையால் முட்டிக் மெளரோ இகார்டி கோலாக்க கோலெண்ணிக்கையை இன்டர் மிலன் சமப்படுத்திக் கொண்டது. தொடர்ந்த 13ஆவது நிமிடத்தில், இன்டர் மிலனின் இவான் பெரிசிக்கின் உதை ஜுவென்டஸின் அன்ட்ரியா பர்ஸாலியில் பட்டுக் கோலாக இன்டர் மிலன் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து, கோல் கம்பத்திலிருந்து 20 அடி தூரத்திலிருந்து பிறீ கிக் மூலம் ஜுவென்டஸின் சமீர் ஹன்டனோவிக் செலுத்திய பந்தை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமீர் ஹன்டனோவிக் கோல் கம்பத்தின் மேலால் தட்டி விட்டிருந்தார். எனினும் போட்டியின் வழமையான நேரம் முடிவடைய மூன்று நிமிடங்கள் இருக்கையில் ஜுவான் குவராடோ உதைத்த பந்து மிலன் ஸ்கிறினியரிடம் பட்டுக் கோலாக கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய ஜுவென்டஸ், அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பிறீ கிக்கொன்றிலிருந்து வந்த பந்தை தமதணியின் கொன்ஸலோ ஹியூகைன் தலையால் முட்டிக் கோலாக்க 3-2 என்ற கோல் கணக்கில் இறுதியில் ஜுவென்டஸ் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற செய்வோ அணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது. றோமா சார்பாக, எடின் டெக்கோ இரண்டு கோல்களையும் பற்றிக் ஷிக், ஸ்டீபன் எல் ஷராவி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். செய்வோ அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட்டோ இன்லெஸி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .