2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இரண்டாவது டெஸ்ட் ஆரம்பிக்கின்றது நாளை

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, மிர்பூரில் இலங்கை நேரப்படி நாளை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கின்றது.

சிட்டகொங்கில் இடம்பெற்ற முதலாவது போட்டியின் ஐந்து நாட்களிலும் 1,533 ஓட்டங்கள் குவிக்கப்பட்ட நிலையில், வெறும் 24 விக்கெட்டுகளே வீழ்த்தப்பட்ட நிலையில், சராசரிக்கு குறைவான ஆடுகளம் என சர்வதேச கிரிக்கெட் சபையால் தரப்படுத்தப்பட்ட நிலையிலேயே இரண்டாவது போட்டி நாளை ஆரம்பிக்கவுள்ளது.

ஆக, இரண்டாவது போட்டி இடம்பெறவுள்ள மிர்பூர் ஆடுகளமானது முடிவை அளிக்கும் ஆடுகளமொன்றாகவே அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடருக்கு முதல் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர்களான சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர ஆகியோரிடம் பங்களாதேஷ் விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்த நிலையில், தமக்கும் சாதகத்தை வழங்கக்கூடியவாறு சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியவாறான ஆடுகளத்தையே பங்களாதேஷ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக ஆடுகளம் காணப்படுமிடத்து, ரங்கன ஹேரத் தலைமையிலான டில்ருவான் பெரேரா, லக்‌ஷன் சந்தகான் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கையின் சுழற்பந்துவீச்சுக் கூட்டணியும் விக்கெட்டுகளைக் கைப்பற்றுமென்ற நிலையில், இப்போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கிடையிலான மோதலானதாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அந்தவகையில், கடந்த போட்டியில் ஓட்டங்களைக் குவித்த குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, றொஷேன் சில்வா ஆகியோரிடமிருந்து மேலும் ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், ஓட்டங்களைக் குவிக்கும் வீரர்கள் அணியில் தமது இடங்களை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில், அஞ்சலோ மத்தியூஸ் காயத்திலிருந்து குணமடைந்து வந்தால், இம்மூவரில் யாராவது ஒருவர் அணியிலிருந்து வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையில், இப்போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமீர விளையாடும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.  

இதேவேளை, மறுபக்கமாக தமது அணித்தலைவராக ஷகிப் அல் ஹஸனை காயம் காரணமாக இழந்துள்ளமை பங்களாதேஷ் அணிக்கு பாதிப்பாகவே இருக்கிறது. இந்நிலையில், முதலாவது போட்டியில் ஓட்டங்களை வழங்கிய சுன்ஸமுல் இஸ்லாம் இப்போட்டிக்கான குழாமிலேயே இல்லாத நிலையில், இவரை அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அப்துர் ரஸாக் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, சபீர் ரஹ்மானும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மொஸாடெக் ஹொஸைனை சபீர் ரஹ்மான் பிரதியீடு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

எவ்வாறெனினும், துடுப்பாட்டத்தை பொறுத்த வரை மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், தமிம் இக்பால், மஹ்முதுல்லா ஆகியோரையே பங்களாதேஷ் நம்பிக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .