2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இராஜினாமா செய்கிறார் டெரன் லீமன்?

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் ஆரம்பமாவதற்கு முன்னர் டெரன் லீமன் இராஜினாமா செய்வார் எனக் கூறப்படுகிறது.

பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் குறித்து பயிற்சியாளர் குழுவுக்குத் தெரியாதென அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருந்தார்.

எவ்வாறெனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கமரோன் பான்குரோப்ட் மஞ்சள் நிறமான நாடாவொன்றால் பந்தை சேதப்படுத்த முயன்றது காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் 12ஆம் வீரரான பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்புக்கு டெரன் லீமன் ஏதோ கூறியதைத் தொடர்ந்து மைதானத்துக்குள் சென்ற பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், கமரோன் பான்குரோப்டுக்கு ஏதோ கூறியிருந்தார்.

இதையடுத்தே தனது நீளக்காற்சட்டைப் பைக்குள்ளிலிருந்த மஞ்சள் நாடாவை தனது நீளக்காற்சட்டைக்குள் கமரோன் பான்குரோப்ட் வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே, டெரன் லீமனுக்குத் தெரியாமால் பந்தைச் சேதப்படுத்த திட்டமிட்டமை நடைபெற்றிருக்க மாட்டாதெனவும் அவ்வாறு நடைபெற்றிருந்தால் டெரன் லீமனின் கட்டுப்பாட்டின் கீழ் அணியில்லை என்றவாறான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் பயிற்சியாளரும் அவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டுமென கோரியுள்ளனர். இதுதவிர ஸ்டீவ் ஸ்மித்தும் அவரது அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

டெரன் லீமன் பதவி விலகினால், அவரை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொன்டிங் அவரைப் பிரதியீடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில், ஆஷஸ் தொடருக்குப் பின்னரான மது விருந்தொன்றில் தான் எவ்வாறு பந்தைச் சேதப்படுத்தியதென்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் டேவிட் வோணர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் டேவிட் வோணருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் வாழ்நாள் வரையிலான தடை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் தற்போது ஓராண்டுத் தடையே விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மற் றென்ஷோ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .