2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் டொட்டென்ஹாம், லிவர்பூல்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிகளுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸும் லிவர்பூலும் தகுதிபெற்றுள்ளன.

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடனான தமது இறுதிக் குழுநிலைப் போட்டியை தாம் சமநிலையில் முடித்துக் கொண்டதும் தமது பி குழுவின் மற்றைய அணியொன்றான இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் நெதர்லாந்துக் கழகமொன்றான பி.எஸ்.வி ஐந்தோவன் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்கு டொட்டென்ஹாமால் தகுதிபெற முடிந்தது.

பார்சிலோனாவின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற டொட்டென்ஹாமின் போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே தமதணியின் முன்கள வீரர் உஸ்மான் டெம்பிலி பெற்ற கோலின் மூலம் பார்சிலோனா முன்னிலை பெற்றது.

குறித்த கோலைத் தொடர்ந்து, டொட்டென்ஹாமின் ஹரி கேன், சண் ஹெயுங் மின், கிறிஸ்டியன் எரிக்சன், லூகாஸ் மோரா ஆகியோர் கோல் பெற பல தடவைகள் முயன்றபோதும் பார்சிலோனாவின் கோல் காப்பாளர் ஜஸ்பர் சில்சன் அபாரமாகத் தடுத்திருந்தார்.

எனினும், போட்டி முடிவடைய ஏழு நிமிடங்கள் இருக்கையில், ஹரி கேன் வழங்கிய பந்தை லூகாஸ் மோரா கோலாக்கியதோடு போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் டொட்டென்ஹாம் முடித்து ஒரு புள்ளியைப் பெற்று, தமது முதல் மூன்று குழுநிலைப் போட்டிகளிலும் மூன்று புள்ளிகளையே பெற்றிருந்தபோதும் அபாரமான மீள்வருகையை நிகழ்த்தி இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ அணியான நாப்போலியுடனான போட்டியின் 34ஆவது நிமிடத்தில் தமது முன்கள வீரர் மொஹமட் சாலா பெற்ற கோலோடும் இறுதித் தருணங்களில் அர்கடியுஸ் மிலிக்கிடமிருந்து கோல் கம்பத்தை நோக்கி வந்த பந்தை தமது கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்திருந்த நிலையிலும் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.

இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு லிவர்பூல் தகுதிபெறுவதற்கு இப்போட்டியில் நாப்போலியை கோலெதுவும் பெற விடாமல் வைத்து பெற வேண்டும் அல்லது இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதில் மேற்குறித்த முடிவு குழு சியிலிருந்து லிவர்பூல் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறுவதை உறுதிசெய்தது.

இந்நிலையில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற ஏனைய பிரதான அணிகளின் முடிவுகள் பின்வருமாறு,

றெட் ஸ்டார் பெல்கிரேட்டின் மைதானத்தில், குழு சி

பரிஸ் ஸா ஜெர்மைன் 4-1 றெட் ஸ்டார் பெல்கிரேட்

முதற்பாதி முடிவில் 2-0

எடின்சன் கவானி 9              மார்கோ கொபெல்ஜிக் 56

நெய்மர் 40

மார்கியுன்ஹாஸ் 74

கிலியான் மப்பே 90+2

 

மொனாக்கோவின் மைதானத்தில், குழு ஏ

பொரூசியா டொட்டமுண்ட் 2-0 மொனாக்கோ

முதற்பாதி முடிவில் 1-0

ரபேல் குரெய்ரோ 15, 88

 

இன்டர் மிலனின் மைதானத்தில், குழு பி

இன்டர் மிலன் 1-1 பி.எஸ்.வி ஐந்தோவன்

முதற்பாதி முடிவில் 0-1

மெளரோ இகார்டி 73   ஹிர்விங் லொஸானோ 13

 

கிளப் ப்ரூகேயின் மைதானத்தில், குழு ஏ

கிளப் புரூகே 0-0 அத்லெட்டிகோ மட்ரிட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .